அமரர். சந்திரசேகரனின் உருவ சிலையை வைப்பதற்கு பூரண ஒத்துழைப்பு தருவேன்:அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்

 

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர்.பெ.சந்திரசேகரனுக்கு தலவாக்கலையில் உருவ சிலை அமைக்கப்படும். இதற்காக அமரரின் குடும்பத்தாரருடனும், கட்சி முக்கியஸ்தர்களிடமும் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்படும் செயலுக்கு தான் ஆதரவு தருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எனது அரசியலின் பிரவேச பாசறை மலையக மக்கள் முன்னணியாகும். மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்த நான் மாகாண சபையில் வெற்றியீட்டியதன் பின் ஆசீர்வாதம் பெற சென்ற போது என்னை ஆசீர்வதித்த அமரர்.சந்திரசேகரனிடம் அடுத்த முறை நாம் இருவரும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவோம் என தெரிவித்தேன். இதன்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கட்சியிலிருந்து விலகும் நிலை உருவாகியது.

 

ஆனால் இன்று அவர் கண்ட தனி வீட்டு கனவை நனவாக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.

 

இன்று நான் ஒரு அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் இருப்பதற்கு காரணம் இவரின் ஆசீர்வாதம் தான் நான் அங்கம் வகித்த கட்சிக்கு ஒரு காலமும் துரோகம் செய்ய மாட்டேன். நான் உண்மையை பேசி வேகமாக சேவையை செய்யும் ஒரு நபர். கெட்டவை நடந்தால் சகித்து கொண்டு செல்லவும் மாட்டேன்.

 

மலையக மக்கள் முன்னணியின் ஒற்றுமையின் காரணமாகவே 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை சமமாக பிரித்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செயல்பட உள்ளேன்.

 

அமரர்.சந்திரசேகரன் மலையகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். மலையகத்தில் தாத்தா, பாட்டன்., பேரன் என்ற அடக்குமுறை ஆட்சியை உடைத்தெரிந்தவர் அமரர்.சந்திரசேகரன் ஆவார்.

 

இவரின் வேண்டுக்கோள் காணி, வீடு, உரிமையாகும். இதனை மலையக மக்களுக்கு பெற்றுத்தர அறிமுகம் செய்தவர் இவரின் கனவு இன்று நனவாக எனக்கு சந்தரப்பம் கிடைத்துள்ளது.

 

கல்விக்கும், தனி வீட்டு திட்டத்திற்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

 

அமரர்.சந்திரசேகரனின் உருவ சிலையை வைப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு என்னால் தரப்படும் எனவும், இது தொடர்பில் அவரின் உறவினர்களிடம் பேசவுள்ளதாகவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.