உங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் இந்தக் காலகட்டத்தில் டெங்கு என்பதாகவே நினைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!அந்த வகையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களாவன.
01) காய்ச்சல் ஏற்பட்ட முதலிரண்டு நாட்களுக்கும் பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரம் அவரவருடைய வயதுக்கேற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் வீடுகளிலேயே எடுத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனையை நாடலாம்.
02) காய்ச்சலைக் குறைப்பதற்காக பரசிற்றமோல்(Paracetamol) தவிர்ந்த வேறு எந்தவிதமான மருந்துகளையும் (Aspirin, Ibuprofen, Diclofenac Sodium, Indomethacin) குறிப்பாக குதவழியாக உட்புகுத்தும் மருந்து வகைகளை (Suppository) பயன்படுத்தக் கூடாது.
03) காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், கட்டாயம் தமது குடும்ப வைத்தியரை அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
04) இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை (Basic test – Full Blood Count) மேற்கொள்ளப்பட வேண்டும். அது ஒரு தடவையாகவும் இருக்கலாம் அல்லது பல தடவைகளாகவும் இருக்கலாம். எனினும் முதலிரு நாட்களிலும் இரத்தப் பரிசோதனை அவசியமில்லை.
05) காய்ச்சல் ஏற்பட்டவுடன் ஓய்வில் இருப்பது அவசியமாகும். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமலும், பெரியவர்கள் வேலைக்கு செல்லாமலும் ஓய்வெடுப்பது முக்கியமாகும். அத்தோடு, கடுமையான உடற்பயிற்சி மற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.
06) போதியளவு நீராகாரம், இளநீர், சூப்புகள், கஞ்சி, ஜீவனி, பழச்சாறுகள், பால் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
07) ஆரம்பத்தில் ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் இருந்து குறைவடைந்த பின்னரும் குறைந்தது அடுத்த ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும். தலையிடி, கண் நோவு, பசியின்மை, களைப்பு, வாந்தி, வெளிறிய தன்மை, மயக்கம், தோலில் வெளிறிய புள்ளிகள், முரசினால் இரத்தக்கசிவு, சிறுநீர் மற்றும் மலத்தில் சிவப்பு நிறம் (இரத்தமாக இருக்கலாம்) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்.
08) சிவப்பு நிற அல்லது பழுப்பு நிறத்திலான நீராகாரங்கள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களை எடுப்பதைத் தவிர்க்கவும்.
09) காய்ச்சல் ஏற்பட்டு அடுத்த பத்து நாட்களுக்கு அல்லது சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வரும் வரைக்கும் பப்பாசிச்சாறு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
10) நுளம்புக்கடியிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஏனையோருக்கும் பரவுவதைத் தடுக்கலாம்.
இவை எல்லாவற்றையும் விட தமது வீட்டிலும், சுற்றுப்புறச் சூழலிலும் நீர் தேங்கி நிற்காத வண்ணம் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரினதும் காலத்தின் கட்டாயக் கடமையாகும்.
Dr. N. Ariff,
Regional Epidemiologist,
Office of RDHS,
Kalmunai.
0773680190