போயஸ் கார்டன் இல்லத்திற்கு 240க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எதற்காக..? -மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  வீட்டிற்கு எதற்காக 240க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திறமைமிகு அதிகாரிகளையும், காவலர்களையும் தேவையற்ற பணிகளில் ஈடுபடுத்தி வீணடிக்காமல் அவர்களை உரிய பணிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது போயஸ் கார்டன் இல்லத்தில், அரசியல் சட்ட ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த யாரும் இல்லாத நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவலர்களும் உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, தற்போது அந்த இல்லத்தில் உள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய பாதுகாப்பு பணியின் காரணமாக, மக்களின் வரிப்பணம் அநாவசியமாக செலவழிக்கப்படுவதுடன், திறமையான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் திறமையும் உழைப்பும் வீணடிக்கப்படுகின்றன எனவும் இத்தகைய அதிகார மீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையின் தலைவரை வலியுறுத்துகிறேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.