அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தேவாலயங்களில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம்: ஒபாமா

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் உலக அமைதிக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது தேவாலயங்களையும், பொதுமக்கள் கூடும் இடங்களையும் குறிவைத்து ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ். ஆதரவு இணையதளங்களில் அமெரிக்காவில் உள்ள முக்கிய தேவாலயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதல் அபாயம் பற்றி ஒபாமா அரசின், மத்திய உளவுப்படையும் (எப்.பி.ஐ.), உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. இதுபற்றி நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்கல் அமைப்புகளுக்கும், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க சட்ட அமலாக்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த இடத்தைத்தான் தாக்கப்போகிறார்கள் என்ற வகையில் குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. இருந்தபோதிலும், ஐ.எஸ். ஆதரவு இணையதளங்களில் தேவாலயங்களின் பட்டியலை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே எந்தவொரு சந்தேகத்துக்கிடமான அறிகுறியின் மீதும் மிகுந்த கண்காணிப்பும், கவனமும் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.