நியாயங்கள்


‘கையொப்பம் போடாத காசோலையில் எத்தனை இலட்சம் ரூபா வேண்டுமென்றாலும் எழுதலாம். அதேபோல ஒருகாரியத்தை செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள், வாக்குறுதிகள் வேண்டுமென்றாலும் சொல்லலாம்’ என்று கண்ணதாசன் கூறினார்,

முஸ்லிம் அரசியலுக்குள் ஆண்டாண்டு காலமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாக்குறுதிகளும், அவை கடைசியில் செல்லுபடியற்றுப் போவதையும் பார்க்கும் போது, முஸ்லிம் சமூகத்தினால் இவ் வரிகளின் யதார்த்தத்தை அனுபவ ரீதியாக உணரக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பிலும் தனிப்பட்ட ஊர்களுக்கான அரசியல் அதிகாரம் தொடர்பிலும் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள், துரதிர்ஷ்டவசமாக செல்லுபடியற்ற காசோலைகளையே ஞாபகப்படுத்துகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஒருவருடத்திற்கும் அதிகமாக உருவெடுத்திருந்த உள்ளக முரண்பாடுகள் ஒரு இணக்கப்பாட்டு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு நகரும் வழியிலேயே கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும். செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் ஆரம்பநிலை இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்ளக முரண்பாடுகள் என்பது ஹசனலியுடன் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. அவருக்கப்பால் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், ஜனநாயகம் பின்பற்றப்படாத நடைமுறைகளால் மனமுடைந்துள்ள அதிருப்தியாளர்கள் மட்டுமன்றி அடிமட்ட வாக்காளர்களையும் சமரசப்படுத்தும் நடவடிக்கைகளில் வெற்றிபெற்றாலேயே கட்சிக்குள் சரியான உள்ளமைதியை ஏற்படுத்த முடியும். அப்படியென்றால், கட்சியின் யாப்பை திருத்துவதில் தொடங்கி… அதிகாரங்களை பகிர்வது தொட்டு… மக்களுக்கு சேவையாற்றுவது என இன்னும் எத்தனையோ சாணக்கிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

பல அபிப்பிராயங்கள்

எது எவ்வாறிருந்த போதும் தலைவருக்கும் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் உருவாகியுள்ள சமரசம் நல்லதொரு சமிக்கையாகும். இந்த சமரசத்தை எட்டுவதற்காக, ஹக்கீம், ஹசனலியிடம் வினயமாகப் பேசி சம்மதிக்க வைத்திருக்கின்றார். செயலாளர் நாயகத்திற்குரித்தான அதிகாரத்தை தந்தால் மட்டுமே இணங்குவேன் என்று பிடிவாதமாக இருந்த ஹசனலி ஒரு எம்.பி.ப் பதவியை பிணையாக வைத்துக் கொண்டு இரண்டொரு மாதத்திற்கு அதிகாரமற்ற செயலளார் நாயகமாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார். ஆக, சற்று தடுக்கி விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலைமையில் இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்திருக்கின்றனர். அத்தோடு, கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் உள்ள தனது அலுவலகத்திற்கு ஹசன்அலி ஓரிரு தடவை சென்று வந்திருக்கின்றார்.

ஆனால், மிகவும் சர்ச்சைக்குரிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அடிப்படையாகக் கொண்டு ஹசனலி சமரசப்படுத்தப்பட்டிருக்கின்றமை அவதானிகளிடையேயும் இப்பதவிக்காக இலவு காத்துக் கொண்டிருக்கும் பிரதேசங்களின் மக்களிடையேயும் கடுமையான விமர்சனத்தை உண்டுபண்ணியிருக்கின்றது. ஹசனலிக்கு அப்பதவி தார்மீகமாக வழங்கப்பட வேண்டுமென ஒரு தரப்பும், வழங்கப்படக் கூடாது என்று இன்னுமொரு தரப்பும் கூறி வருகின்றது. ஹசனலி, எம்.பி. பதவியைப் பெற்றுக் கொண்டு சாணக்கியத்திடம் சரணடைந்து விட்டதாக ஒரு சிலரும், ஹசனலியை திருப்திப்படுத்துவதற்காக பல ஊர்களையே ஹக்கீம் ஏமாற்றிவிட்டதாக வேறுசிலரும் நவீன ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் கொடுக்கக் கூடாது?

இங்கே பல கோணங்களில் இவ்விவகாரத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, மு.கா.வின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு ஏன் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியைக் கொடுக்கக் கூடாது? ஏன் கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன நடக்கும்? கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்? சரி, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியைக் கொடுத்து அவரை உள்ளே எடுத்து விட்டால் எல்லாப் பிரச்சினைகளும் இனிதே முடிவுக்கு வந்துவிடுமா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவியை வழங்கக் கூடாது என்பதற்கு பல நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக அவர் இதற்கு முன்னர் (இரண்டு ஆட்சிக்காலத்தில்) மூன்று தடவைகள் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி.யாகும் வரப்பிரசாதத்தைப் பெற்றிருக்கின்றார். ஒரு ஊருக்கு இரண்டு எம்.பி.கள் கொடுபடக்கூடாது என்று தலைவர் ஹக்கீம் கூறிவருகின்ற நிலையில் ஹசனலியின் ஊரில் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரும்; இருக்கின்றார். ஆனால் பல வருடங்களாக எம்.பி. தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பல ஊர்களுக்கு இன்னும் அது வழங்கப்படவில்லை என்பதுடன், தனியே வாக்களித்து எம்.பி. ஒன்றை பெறுவதற்கு முடியாத பல சிற்றூர்களும் இருக்கின்றன. இவ்வாறான பின்னணியில் ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டியதில்லை என்ற கருத்து நிலவுகின்றது.

அதுமட்டுமன்றி, ஹக்கீமுக்கும் அவருக்கும் இடையிலான உறவு கசங்கத் தொடங்கிய பிறகு தலைவருடன் முரண்பட்டு சில அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார். ஹசனலியின் முரண்பாடே அண்மைக்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட கொந்தளிப்புக்களுக்கும் வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களுக்கும் முக்கிய ஆரம்பமாக அமைந்திருந்தது. இன்று, தேர்தல் ஆணைக்குழுவின் ஊடாக இராஜதந்திரமாக இவ்விடயத்தை முன்னகர்த்தி இருக்கின்றார். எனவே இவ்வாறான ஒருவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

எம்.ரி.ஹசன்அலிக்கு எம்.பி.வழங்கப்படக் கூடாது என்பதற்கு முன்வைக்கப்படும் நியாயங்களை விட, அப் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்பதற்கு கனதியான நியாயங்கள் இருக்கின்றன. அதாவது, பல தடவை தேசியப்பட்டியலில் எம்.பி.யாக இருந்தவர் என்ற காரணத்தை விட மற்றெல்லா காரணங்களும் கடந்த 13 மாதங்களுக்குள் தோற்றம் பெற்றவையாகும். மு.கா.வுக்கும் ஹசனலிக்கும் இடையிலான உறவு என்பது 32 வருடம் நீளமானதாகும். கிழக்கின் எழுச்சியில் அவரது மகன் இடம்பிடித்திருக்கின்றார் என்றால் கூட அந்த எழுச்சி உருவானது ஏழு மாதங்களுக்குள்ளேயே உருவானதாகும். அத்துடன் இவ்வாறான சிக்கல்கள், தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற கோஷங்கள் எல்லாம் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் கடந்த 16 வருடங்களாக மேற்கொள்ளத் தவறிய சமூகநல அரசியலின் விளைவாக தோற்றம் பெற்றவையாகும்.

எனவே, இப்போது முரண்பட்டிருக்கின்றார் என்பதற்காக இதுவரைகாலமும் அவர் செய்த அர்ப்பணிப்பை பூச்சியமாக்கி விட முடியாது. மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுடன் இணைந்து பணியாற்றிய ஹசனலி தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். மு.கா. உறுப்பினர்களுக்கு புலிகளால் உயிர் அச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதியில் கொழும்புக்கு ஓடாது, களத்தில் நின்றார். அஷ்ரஃபோடு மட்டுமன்றி றவூப் ஹக்கீமோடும் மிக கண்ணியமான நெருக்கத்தை கொண்டிருந்தார். வெளித் தோற்றத்தில் எப்படித் தெரிந்தாலும் உள்ளார்ந்த அடிப்படையில் மிகவும் பலமிக்க ஆளுமை என்பதை ஹக்கீம் தரப்பு இப்போது உணர்ந்திருக்கும். இன்றைய நிலைவரப்படி முஸ்லிம்களின் பிரச்சினைகள தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்களை தனது காப்பகத்தில் வைத்திருக்கின்றார். அந்த அடிப்படையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவர் முன்னிறுத்திச் செயற்படுவார் என்ற ஒரு அனுமானம் இருக்குமென்றால், உருப்படிகளை விட அவர் போன்ற உருப்படியானவர்கள் இப்பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதை வரவேற்கலாம்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டியல் எம்.பி.யை இராஜினாமாச் செய்துவிட்டு, தலைவர், தவிசாளருடன் சேர்ந்து செயலாளர் நாயகம் ஹசனலியும் 2008 இல் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு ஆகக் கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றிபெற்றிருந்தார். இதனை வைத்துப் பார்க்கும் போது அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வர முடியாது. இந்நிலையில், கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான இடத்தையே ஹசனலி கோரி நின்றார். ஆனால் ‘தனக்கு தேசியப்பட்டியல் எம்.பி.தருவதாக வாக்களித்து போட்டியிடும் வாய்ப்பை தலைவர் ஹக்கீம் மறுத்ததாக’ ஹசனலி கூறுகின்றார். ஆக, தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஊர்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலில் இவரும் உள்ளடங்குவது மட்டுமன்றி முன்மொழியப்பட்ட ஐந்துபேரில் ஒருவராகவும் இவர் இடம்பிடித்திருந்தார். எனவே, தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லிக் கேட்பதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது.

ஏன் எடுக்கக் கூடாது?

உண்மையில் இப்போது இங்கிருப்பது செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி. கொடுக்க தகுதியில்லை அல்லது கொடுக்கக் கூடாது என்ற பிரச்சினையல்ல. மாறாக, அந்த எம்.பி. பதவியை இனிமேல் அவர் எடுக்கக் கூடாது என்பது பற்றியதாகும். அதாவது நாம் மேற்குறிப்பிட்டவாறு தேசியப்பட்டியல் எம்;;;.பியை கோருவதற்கான தார்மீக உரிமைகளை ஹசனலி கொண்டிருக்கின்றார் என்றாலும் இன்றிருக்கின்ற நிலைமையில் செயலாளர் அதிகாரம் கிடைப்பதற்கு முன்னர் அப்பதவியை எடுக்கக் கூடாது என்று அவருக்கு மானசீகமாக ஆதரவளிப்போரில் கணிசமானோர் கருதுகின்றனர். செயலாளர் நாயகத்திற்கான அதிகாரம் வழங்கப்படாமல் அல்லது வேறு வழிகளில் அவர் ஏமாற்றப்படலாம் என்று அவர்கள் சந்தேகம் கொள்கி;னறனர்.
ஆரம்பத்தில் தேசியப்பட்டியல் எம்.பி. தனக்கு கிடைக்குமென்று செயலாளர் நாயகம் எதிர்பர்ர்த்திருந்த போதிலும் அதனை தலைவர் ஹக்கீமிடம் அவர் நேரடியாகச் சென்று கேட்கவில்லை. இருப்பினும், அவர் எம்.பி.கேட்டு அடம்பிடிப்பதாக ஹக்கீம் ஆதரவு தரப்பினர் ஒரு பரப்புரையை மேற்கொண்டனர். இது ஹசனலியை ஒரு பதவியாசை பிடித்தவராக சித்திரிததது. இதனால் தனது இமேஜ் பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர் சிறிது காலத்தின் பின்னர் ‘தனக்கு தேசியப்பட்டியல் தேவையில்லை என்றும் அதனை அரசியல் அதிகாரம் வேண்டிநிற்கும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு வழங்குமாறும்’ பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார்.
அதன்பிறகு மு.கா. தலைவர் தரப்பிலிருந்து சமரசம் பேச வந்தவர்கள் தேசியப்பட்டியல் தருவதான வாக்குறுதியை அளித்திருந்தனர். இருப்பினும், தனக்கு இப்போது அவசியமானது எம்.பி. பதவி அல்ல என்றும் முதலில் செயலாளர் நாயகத்திற்கான பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்க வேண்டும் என்ற தொனியிலும் பதில் அனுப்பியிருந்தார்.

ஹசனலி எடுத்த இந்த உறுதியான நிலைப்பாடானது அவருக்கு ஆதரவு பெருகுவதற்கு வழிவகுத்தது. அவரை விமர்சித்தவர்களில் குறிப்பிட்டளவானோரும் அவரது நிலைப்பாட்டில் நியாயம் கண்டனர். ஒரு பலம்பெற்ற நிலையை ஹசனலி அடைந்திருந்தார். எனவேதான் இப்போது செயலாளர் நாயகத்திற்கான அதிகாரம் கிடைப்பதற்கு முன்னதாகவே, எம்.பி.பதவியை எடுத்துக் கொள்வது ஹசனலியின் இமேஜை பாதிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

தலைவர் ஹக்கீமுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அதேபோல் மேலே குறிப்பிட்ட காரணங்களால் எம்.பி.யை கோருவதற்கான தார்மீக உரிமையும் அவருக்கு இருக்கின்றது. ஆனால், இங்குள்ள கரிசனைக்குரிய நியாயம் என்னவெனில், ஹசனலி அதிகாரத்திற்கு முன்னதாக எம்.பி.யை எடுப்பதன் மூலம், அவர் மறைமுகமாக (மக்கள் மனங்களில்) தோற்கடிக்கப்பட்டுவிடுவாரா என்பதாகும்.

முடிவுக்கான காரணம்

மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், எம்.ரி.ஹசனலிக்கு மனம் விரும்பி இந்த எம்.பி.ப் பதவியை தருவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. செயலாளர் நாயகத்தின் அதிகாரத்தை வழங்குவது என்றால் கட்டாய உயர்பீடத்தை கூட்டி கட்சியின் யாப்பை திருத்தி, பேராளர் மாநாட்டின் ஊடாக அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதனை திடுதிடுப்பென செய்ய முடியாது. எனவே இப்போதைக்கு ஹசனலியை சமாளிப்பதற்கும் நம்ப வைப்பதற்கும் இருக்கின்ற ஒரே ஆயுதம் எம்.பி. பதவிதான் என்ற அடிப்படையிலேயே அதனை தருவதற்கு ஹக்கீம் உடன்பட்டிருக்கின்றார்.

இதேவேளை, இவர்கள் இருவரும் சமரசமாகவில்லை என்றால் கட்சியின் சில செயற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முடக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் கூறியிருக்கின்றார். எனவே, கட்சியின் சின்னமோ, பணிகளோ முடக்கப்பட்டால் அந்தப் பழிச்சொல் தனக்கு வந்து விடும் என்ற நியாயத்தின்படி(யும்) ஹசனலி, கட்சித்தலைவரது கோரிக்கைகளுக்கு இணங்கிப் போகியிருக்கின்றார். அதுமட்டுமன்றி, கட்சிக்கு வெளியே இருந்து எதையும் செய்ய முடியாது என்பதுடன் ஏதாவது அதிகாரத்துடன் கட்சிக்குள் இருந்தாலேயே யாப்புத் திருத்தத்திற்கான வேலைகளை செய்யலாம், கட்சியை தூய்மைப்படுத்தலாம், களைபிடுங்கலாம் என்று கூட அவர் எண்ணியிருக்கலாம்.

ஆனால் ஹசனலிக்கு உண்மையிலேயே தேசியப்பட்டியல் கொடுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழாமலில்லை. சல்மான் எம்.பி.யின் இராஜினாமா கடிதத்தின் பிரதி ஹசனலிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று மு.கா.தரப்பினர் கூறியுள்ளனர். மட்டுமன்றி, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கட்சித்தலைவர்; ‘இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு சல்மான், எம்.பி.யாக இருக்கலாம்’ என்று கூறிக் குழப்பியிருக்கின்றார். எவ்வாறாயினும், ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது இக்குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். அநேகமாக ஹசனலி சத்தியப்பிரமாணம் செய்வார்.

ஊர்களின் கோரிக்கை

இந்நிலையில் தேசியப்பட்டியல் எம்.பி.யை ஹசனலிக்கு கொடுக்கக் கூடாது என்றும் தலைவர் வாக்களித்த அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த மன்றாட்டங்கள் மிகவும் நியாயபூர்வமானவையும் கூட. இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். தேசியப்பட்டியல் எம்.பி.க்காக பல ஊர்களும் ஹசனலி உள்ளடங்கலாக பல தனிநபர்களும் காத்திருக்கின்றனர். அதனைக் கோரிப் பெறுவதற்கு எல்லா தரப்பினருக்கும் உரிமையுள்ளது. ஆயினும், இதற்கு முன்னர் ‘தற்காலிகம்’ என்ற அடிப்படையில் ஹக்கீம் தனது சகோதரருக்கும் நண்பருக்கும் எம்.பி. பதவிகளை வழங்கினார். இதை யாராவது உயர்பீடத்தில் எதிர்த்துப் பேசினார்களா? அட்டாளைச்சேனையோ வேறு எந்த ஊரோ கட்சித்தலைவருக்கு கூட்டாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதா? அப்படி எதுவும் நடந்ததாக நினைவில்லை. மாறாக, ஊடகங்கள் மட்டுமே இவ்விடயத்தை எழுதிக் கொண்டிருந்தன.

ஆகவே, ஏதோ ஒரு அடிப்படையில் காய்நகர்;த்தி அந்த எம்.பி.பதவியை பெறும் நிலைக்கு ஹசனலி வந்திருக்கின்றார். இன்றிருக்கின்ற நிலையில், ஊர்களின் அரசியலை திருப்திப்பதுவதை விட கட்சியின் சின்னமும் இயக்கப்பாடும் முடங்காமல் பாதுகாப்பதே அவசரமானது என்ற அடிப்படையிலேயே அவருக்கு எம்.பி.யை கொடுக்கும் முடிவுக்கு தலைவர் ஹக்கீமும் வந்திருக்கின்றார். ஆனால், தலைவரின் இந்த முடிவு சாணக்கியமற்றது என்று நினைக்கின்ற ஊர்களும் தனிநபர்களும் அதற்கெதிராக போராடி, அப்பதவியை பெறலாம். உதாரணமாக, அட்டாளைச்சேனையில் குறிப்பிட்ட ஒருவரை பெயர்குறிப்பிட்டு(?) ‘அவரை எம்.பி.யாக நியமிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை எடுக்கலாம். இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. அதைவிடுத்து, போட்டியில் அவன் வென்றதால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று கூறுவதும். வெற்றிக் கேடயத்தை நமக்கே தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நமது இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும்.

நிலைமை இவ்வாறிருக்க, ஹசனலி எம்.பி.யாகிவிட்டால், சமரமாகிப் போய்விட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சிலர் நினைக்கக் கூடும். நிச்சயமாக அப்படியில்லை. யாப்புத் திருத்தப்பட்டு, செயலாளர் நாயகத்திற்கான அதிகாரம் வழங்கப்பட்டு, கட்சிக்குள் இருக்கின்ற அதிகாரங்கள் ஜனநாயக ரீதியாக பரவலாக்கப்பட்டு, கட்சி மறுசீரமைக்கப்பட்டு, மக்கள் நீரோட்டத்தில் கலந்த பிறகே அவ்வாறான முடிவுக்கு வரமுடியும்.

மு.கா. தலைவர் ஹக்கீம், ஹசன்அலி, அவரது நலன்விரும்பிகள், பசீர் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள், வாக்குறுதியளிக்கப்பட்ட பிரதேசங்கள் என மேற்குறிப்பிட்ட எல்லோருடைய நிலைப்பாடுகளிலும் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் சில நியாயங்கள், நியாயமானவை என உணரப்படுவதற்கு காலமெடுக்கும்.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 25.12.2016)