நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும் : மோடி

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். 

நாட்டின் நீண்ட கடல் பாலம், 2 மெட்ரோ ரெயில் பாதைகள் என மும்பைக்கு மட்டும் 1.06 லட்சம் கோடி மதிப்பீட்டிலான உள்கட்டமைப்பு பணிகளுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார். புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணியை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. ஊரக பகுதிகளில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை களைய வேண்டும். ஊரக வளர்ச்சியை மேம்படுத்த முதலில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ரூபாய் நோட்டு இந்த அறிவிப்பின் மூலமாக, இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார மாற்றம் வரும். நாட்டு மக்களின் நம்பிக்கை வீண்போகாது. நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின் நடவடிக்கையால் நீங்கள் பயப்பட வேண்டி வரும். வலிமைமிக்க இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவோம்.

நாங்கள் பதவியேற்ற நாள் முதல் ஊழலுக்கு எதிரான போராட்டம் நடந்தி வருகிறோம். நவம்பர் 8-ம் தேதி வரலாற்று மிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் முன்ணனி நாடாக இருக்கும்.

ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் அதில் வெற்றி கிடைக்கும் வரை இந்த கறுப்பு பண போர் தொடரும். ரொக்கமற்ற பண பரிவர்த்தனைக்கு மாறுவது அவசியம். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். நேர்மையானவர்கள் சந்தித்து வரும் இக்கட்டான பிரச்சனைகள் குறையும்.

ஒரு விஷயத்தை தெளிவாக செய்ய வேண்டும். நீண்டகால பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக விவேகமான பொருளாதார கொள்கைகளை அரசு தொடர்ந்து பின்பற்றும். குறுகியகால அரசியல் நோக்கத்திலான முடிவுகளை எடுக்க மாட்டோம். நாட்டின் நலன் சார்ந்த முடிவுகளாக இருந்தால் அவற்றை எடுப்பதற்கு தயங்க மாட்டோம். 

இவ்வாறு அவர் பேசினார்.