விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந் நிலையில் மீண்டும் அவர் ஏற்கனவே தங்கியிருந்த கட்டணம் அறவிடப்படும் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் நிமல் லன்ஸா ஊடகங்களிடம் குறிப்பிட்டார். ஏற்கனவே பஷில் ராஜபக்ஷவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருதய கோளாறு இருப்பதாகவும் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று முன் தினம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான திவி நெகும நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன் போது பஷில் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் முன் வைத்துள்ள பிணைக் கோரிக்கை தொடர்பில் ஆரயப்படவுள்ளதுடன் அவருக்கு பிணை வழங்குவதா அல்லது மறுத்து மேல் நீதிமன்றை நாடுமாறு கூறுவதா என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.