முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற் றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு விசாரணைக்கு வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு விமானப்படைக்கு நான்கு மிக் 27 ரக விமானங்கள் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ அன்றைய தினம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு முன்னிலையில் ஆஜரான நிலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராக வேறு ஒரு திகதி கோரப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராக அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சட்ட பாதுகாப்புடன் அவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரகக் கூடும் என அவரது சட்டத்தரணிகள் குழாத்தில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.