நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

க.கிஷாந்தன்

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள (பவர் ஹவுஸ்) நீர் மின் உற்பத்தி நிலையத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கோரி அத்தோட்ட தொழிலாளர்கள் 60ற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 20.12.2016 அன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினால் சுமார் 60 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படும் அச்சம் காரணமாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

 

நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட தண்ணீர் உள்வாங்கும் குழாய்களை புதைப்பதற்காக மண் அகழ்வு செய்யப்படுவதால் இப்பகுதியில் அனர்த்தம் ஏற்பட கூடிய வாய்ப்பு இருப்பதாக இத் தோட்ட தொழிலாளர்கள் கடிதம் மூலம் தோட்ட அதிகாரியின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளனர்.

 

இதன் போது இத்திட்டத்தை நிறுத்துவதாக தெரிவித்த தோட்ட அதிகாரி மீண்டும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க தனியார் கம்பனிக்கு இடம் கொடுத்துள்ளார்.

 

எனவே மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது இத்திட்டத்தை முன்னெடுக்க இடம் கொடுப்பதாகவும் சில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இருந்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகளால் உத்தரவாதம் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாகவும், இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் எச்சரித்தனர்.