ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் தலைக்கு அமெரிக்கா 150 கோடி ரூபாய் சன்மானமாக அறிவித்துள்ளது!

ஈராக்கில் உள்ள மோசுல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசுல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா ஒரு கோடி டாலர் சன்மானமாக அறிவித்திருந்தது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதி படுகாயமடைந்ததாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்ததாகவும் ஈராக் ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டன.

 

இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு மறுத்து விட்டது. அவன் இன்னும் உயிருடன் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 150 கோடி) சன்மானமாக அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசின் நீதிக்கான பரிசுதிட்ட இயக்குனரகம் தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் தலைக்குதான் இவ்வளவு பெரிய தொகையை சன்மானமாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.