தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டது.
இதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 1-ந்தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்பட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 7-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பினார். அவ்வப்போது டாக்டர்கள் வந்து கருணாநிதியின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கருணாநிதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இரவு 11 மணிக்கு மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார்.
அதனால் ‘டிரக்கியா ஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவரது உடல் நிலை சீரானது. டி.வி. பார்ப்பது, பத்திரிகை படிப்பது போன்ற பணிகளில் ஈடுபடத்தொடங்கினார்.
வயோதிகம் காரணமாக ஏற்படும் பிரச்சினையால் மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டு ஆஸ்பத்திரியிலேயே உள்ளார்.
தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார். அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருணாநிதி குணம் அடைந்து வருவதால் மருத்துவ மனையில் முகாமிட்டிருந்த மு.க.ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று நாமக்கல் சென்றுள்ளார்.
அவர் இன்று இரவு சென்னை திரும்பியதும் கருணாநிதி டிஸ்சார்ஜ் தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
அனேகமாக 2 நாளில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று தெரிகிறது.