பனிப் போரும் வெள்ளைக் கொடியும் ,சரணடைந்த பலர் வஞ்சிக்கப்பட்டதாக வரலாற்றுக் கதைகள் ஏராளம்

 

 இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு இரு பிரிவு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பனிப்போர் நான்கு தசாப்தங்களாக நீடித்தது. அதுபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலிக்கும் இடையில் ‘அதிகார குறைப்பு’ தொடர்பாக இடம்பெற்ற பனிப்போர் 13 மாதங்களுக்குப் பின்னர் கொஞ்சம் சமரசத்திற்கு அல்லது யுத்த நிறுத்தத்திற்கு வந்திருக்கின்றது. 

ஒரு களப்போரில் சரணடைவதற்கு மட்டுமன்றி, சமரசத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் பயன்படுத்தப்படும் வெள்ளைக் கொடிகள் போல, மு.கா.வின் தலைவர் றவூப் ஹக்கீமும் செயலாளர் நாயகம் ஹசன்அலியும் சில நல்ல சமிக்கைகளோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றனர். அதாவது வெள்ளைக்கொடிகளுடன் நெருங்கி வந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். 

ஹக்கீமுக்கும் ஹசன்அலிக்கும் இடையில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த உட்பூசல், தேர்தல் ஆணைக்குழுவின் காலக்கெடு, கடந்த உயர்பீடக் கூட்டத்தில் மூடிய அறைக்குள் தலைமைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் என்பன, மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமை, ஹசன்அலி விடயத்தில் இறங்கிப் போகச் செய்திருக்கின்றது. மறுபக்கத்தில் ஏதோ சில நியாயங்களின் அடிப்படையில் தனது பிடிவாதத்தை ஹசன்அலியும் விட்டுக் கொடுத்திருக்கின்றார். 

இதன்படி, தலைவருக்கும் செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இங்கு பல விடயங்கள் விரிவாக பேசப்பட்டு கடைசியில், ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த பேராளர் மாநாடு (பெப்ரவரியில்) நடைபெறும் வரைக்கும் ஹசன்அலி இப்போது இருக்கும் அதிகாரம் குறைந்த பதவியிலேயே இருப்பது எனவும் பேராளர் மாநாட்டில் யாப்பை திருத்தி அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவியை வழங்குவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக உடனடியாக தேசியப்பட்டியல் எம்.பி. சல்மானை இராஜினாமா செய்யவைத்து அப்பதவியை ஹசன்அலிக்கு வழங்குவது என்று ஹக்கீம் வழங்கிய வாக்குறுதியை ஹசன்அலி ஏற்றுக் கொண்டுள்ளார். 

இதன்பின்னர், வெள்ளிக்கிழமையன்று இரு தரப்பினரும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று விளக்கமளித்துள்ளனர். அத்துடன் தலைவரும், பெயரளவிலான செயலாளர் நாயகமும் தமக்கிடையே எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவும் இந்த இணக்கப்பாடு மற்றும் வாக்குறுதிகளுக்கு சாட்சியாகியுள்ளது.

சாணக்கியத்திடம் ஹசன்அலி சரணடைந்திருக்கின்றாரா? அல்லது இராஜதந்திரமாக காய்நகர்த்தி வெற்றி பெற்றிருக்கின்றாரா? என்பதை அடுத்த பேராளர் மாநாடு நடைபெறும் வரைக்கும் கூறமுடியாது. ஆனால் கட்சியின் யாப்பு திருத்தப்படும் வரை இது தற்காலிக இணக்கப்பாடாகவே இருக்கும்.

போர் ஆரம்பம்

2015 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ.காதரை கட்சியின் செயலாளர் போல குறிப்பிட்டு மு.கா. தலைவர் ஹக்கீம் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆவணங்களை அனுப்பியிருந்தார். 

இவ்வாறிருக்கையில், தேர்தல் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவியிக்கான நிரலில் இருந்து ஹசன்அலியின் பெயர் நீக்கப்பட்டதோடு அவ்விடத்தில் ஏ.சீ.ஏ.மொஹமட் மன்சூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே மேலும் தாமதித்தால் எல்லாம் கைமீறிப் போகும் என நினைத்த எம்.ரி.ஹசன்அலி உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தனது ஆட்சேபனையை அறிவித்தார். 

ஹசன்அலி விரைந்து செயற்பட்டமைக்கு இதுமட்டுமே காரணம் என்று கருதவும் முடியாது. ஏனெனில், முன்னர் கட்சித் தலைமையோடு முரண்பட்டவர்கள் எல்லோரும் கால ஓட்டத்தில் ஒதுங்கிச் சென்று விட்டதாலும், திணிக்கப்படும் தீர்மானங்களை ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உயர்பீட உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதாலுமே கட்சி இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என்பது ரகசியமல்ல. எனவே கட்சியை இப்படியே விட்டு ஒதுங்கிப் போனால் முதலாளித்துவ சிந்தனையுடன் இருப்போர் தமது விருப்பப்படி கட்சியைக் கொண்டு செல்ல அதுவே வாய்ப்பாகிப் போய்விடும் என்பதை ஹசன்அலி உணர்ந்திருப்பார். 

தலைவருடன் கருத்து முரண்பட்டிருக்கும் தவிசாளரும் செயலாளரும் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்றும் கட்சியை தூய்மைப்படுத்தப் போவதாகவும் அறிவித்தமைக்கும் இதுவே பிரதான காரணமாகும். அதுமட்டுமன்றி, தேர்தல் ஆணைக்குழு நிரலில் தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதன் பாரதூரத்தையும் முன்னுணர்ந்தே கொண்டே, ஹசன்அலி விரைந்து செயற்பட்டிருப்பதாக அனுமானிக்க முடியும். அந்த வகையிலேயே, அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் என்ற சட்ட ரீதியான அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பெற அவர் முயற்சி செய்தார் எனலாம். 

அதனைத் தொடர்ந்தே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமுக்கு 16.11.2016 திகதியிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். செயலாளர் பதவிப் பிரச்சினைக்கு 15.12.2016 இற்கு முன் தீர்வு காணுமாறு அதில் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் ஊடகங்கள் வாயிலாக வெளியில் கசிந்ததும் முஸ்லிம்களிடையே இதுவே பேசு பொருளானது. எனவே, மக்கள் மன்றத்திலும் சரி, சட்ட ரீதியாகவும் சரி இவ்விகாரத்திற்கு முடிவுகட்டியேயாக வேண்டிய நிலைக்கு மு.கா. தலைமை தள்ளப்பட்டது. இந்த காரணத்தை முதன்மைப்படுத்தியே கடந்த 14ஆம் திகதிய உயர்பீடக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக ஹசன்அலியை வழிக்குக் கொண்டுவருவதற்கு தூதுகள் விடப்பட்ட போதும் இருவரும் பேச்சுவார்த்தை மேசையில் அமரவில்லை. இவ்விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து றவூப் ஹக்கீம் பலருடன் கலந்தாலோசித்திருக்கின்றார். மறுபுறத்தில் ஹசன்அலியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டே கொழும்புக்கு சென்றார். ஆனால் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

‘இவர்களில் யார் செயலாளர்’ என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கேட்வில்லை. மாறாக, இரு பதவிகளில் ஒன்றை மாத்திரம் ஸ்தாபிக்குமாறு பணித்துள்ளார். அவ்வாறென்றால், ஒரு பேராளர் மாநாட்டில் யாப்புத் திருத்தத்தை மேற்கொண்டே அதைச் செய்யலாம். அதைவிடுத்து உயர்பீடக் கூட்டத்தில் அதனைச் செய்ய முடியாது என்பதை விடயமறிந்தோர் அறிந்திருந்தனர். ஆயினும், செயலாளர் பதவி, தேசியப்பட்டியல் எம்.பி. போன்ற விடயங்கள் குறித்து முக்கியமான தீர்மானங்கள் இக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. 

உயர்பீட உள்ளரங்கம்

கடந்த புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு தாறுஸ்ஸலாமில் மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் ஆரம்பமாகி இரவு 9.25 இற்கு முடிவடைந்தது. பசீர் சேகுதாவூத் உள்ளடங்கலாக உயர்பீட உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்;. ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத ஒடுக்குமுறை தொடர்பில் பேசப்பட்டது. மு.கா.தலைவர் வாய்திறந்து பேச வேண்டும் என்று பலரும் அழுத்திக் கூறினர். அதன் பின்னர் செயலாளர் விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹசன்அலிக்கு சார்பாக பலர் கருத்து தெரிவித்தனர். ஓரிருவர் அதை எதிர்க்கவும் செய்தனர். 

இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக உயர்பீட உறுப்பினர்களின் வாயிலாக பல நம்பகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாகப்பட்டது, இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஜவாத், ‘செயலாளர் நாயகம் இந்த கட்சிக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்’ என்பதையும்’ அவரையே கட்சியில் அதிகாரமுள்ள செயலாளராக தொடர்ந்தும் பதவியில் அமர்த்த வேண்டும்’ என வலியுறுத்தினார். 

அதனைத் தொடர்ந்து கலீல் மௌலவி பேசினார். ‘கடந்த வருடம் நவம்பரில் இடம்பெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் ஹசன்அலிக்கு உதவியாக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்படுவதாகவே நீங்கள் கூறினீர்கள். அவருக்குப் பதிலாக இவர் என்று கூறவில்லை’ என்று சுட்டிக்காட்டினார். 

‘இன்னுமொருவரின் கட்டுப்பாட்டில் செயற்படும், சம்பளம் பெறும் ஒருவர் செயலாளராக இருப்பது நமது கட்சிக்கு நல்லதல்ல. எனவே தலைவர், செயலாளர் நாயகத்துடன் விட்டுக் கொடுப்புடன் பேச வேண்டும்’ என்றார். அப்போது எழுந்த ஒரு உறுப்பினர், கடந்;த பேராளர் மாநாட்டில் மன்சூர் ஏ.காதரின் பதவியானது தமிழில் ‘உயர்பீட செயலாளர்’ என்றும் ஆங்கிலத்தில் ‘கட்சியின் செயலாளர்’ என்றும் சூட்சுமமான முறையில் வாசிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்தினார். 

இவ்வாறு பலர் செயலாளர் நாயகத்திற்கு சார்பாக பேசிக் கொண்டிருந்த வேளையில் இரண்டொரு உறுப்பினர்கள் எழுந்து அதனை மறுதலித்துப் பேசியமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஒரு கட்டத்தில் எழுந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அன்ஸில், ‘இந்த கட்சிக்கு எதிராக சூழ்ச்சி செய்த எத்தனையோ பேருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுடனேயே உறவை புதுப்பிக்க முடியுமாயின் அவ்வாறு எந்த துரோகத்தையும் செய்யாத ஹசன்அலியுடன் இணங்கிப் போவது நடக்காத காரியமல்ல’ என்றார் அழுத்தமாக. 

இதேவேளை. இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த தலைவர் றவூப் ஹக்கீம், ‘செயலாளர் நாயகமான எம்.ரி.ஹசன்அலியை சந்திப்பதற்கு முயற்சி செய்தும் அது சாத்தியப்படவில்லை. அவருக்கு நான் தேசியப்பட்டியல் எம்.பி.தருவதற்கு தயாராகவுள்ளேன். அதை அவருக்கு சொல்லியும் அவர் இணங்கி வரவில்லை. இந்நிலையில் இன்றைய உயர்பீடக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. கட்சிக்குள் இவ்விடயத்தை பேசவும் இல்லை’ என்ற விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இது பலருக்கும் தர்க்கவியல் நியாயமாக தோன்றியது. 

அவ்வேளையில், எழுந்த ஜவாத், ‘நான் இப்போது அவரை இங்கே அழைத்து வருகின்றேன் பேசுவோம். இல்லாவிடின் நாளை அவரை அழைத்து வந்து கூட்டம் நடத்துவோம்’ என்று பல முன்மொழிவுகளை முன்வைத்ததாக உயர்பீட உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், தலைவர் அதற்கு ‘இல்லை’ என்று மறுக்கவும் இல்லை. ‘கூட்டி வாருங்கள் பேசுவோம்’ என்ற உறுதியாக உத்தரவு பிறப்பிக்கவும் இல்லை என்று சொல்லப்படுகின்றது. 

ஆக, பிரச்சினை இவ்வளவு சிக்கலாகிப் போயுள்ளதால் ஹசன்அலியுடன் பேசுவதற்கு தலைவர் ஹக்கீம் விரும்புகின்றார். ஆனால், இன்று மற்றைய உறுப்பினர்களே இந்தளவுக்கு பேசுவார்களாயின் ஒரு பொதுத்தளத்தில் ஹசன்அலியை கொண்டு வந்து நிறுத்தினால், அவர் பாரதூரமாக எதையும் சொல்லி, நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடுவாரோ என்று தலைமை பயப்படுவதாக தோன்றுகின்றது. எனவே, எல்லோருக்கும் முன்னால் செயலாளர் நாயகம் ஆஜராகுவதற்கு முன்னதகா, அவரை தனியே சந்தித்து சமரசம் செய்வதற்கு தலைமை விரும்புவதாக எடுத்துக் கொள்ளலாம். 

இந்த மனநிலையில் ஹக்கீம் இருப்பதாலும், சபையில் பேசிய உறுப்பினர்களுள் பலர் ஹசன்அலியுடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாலும், ‘ஹசன்அலி விரும்பிய இடத்தில் நான் அவரை நாளை (15ஆம் திகதி) சந்திக்க தயாராகவுள்ளேன். இதனை அவருக்கு தெரியப்படுத்தி, இடத்தை கேட்டுச் சொல்லுங்கள்’ என்ற தொனியில் தலைவர் ஹக்கீம் (அன்று) குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தேர்தல் ஆணையாளருக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

உயர்பீடக் கூட்டம், முடிவடைந்து வெளியில் வந்த தலைவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலும், ஹசன்அலியை சந்திப்பதற்கான விருப்பம் அறிவிக்கப்படும் என்ற விடயத்தை கூறியதோடு, யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சரியானவை என்று உயர்பீடம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு விளக்கமளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மு.கா. உயர்பீடக் கூட்டம் நடைபெற்ற மறுநாளே தேர்தல் ஆணைக்குழு வழங்கிய காலக்கெடுவும் முடிவடைந்தது. அதற்கு முன்பிருந்தே தேர்தல் ஆணைக்குழு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரின் பெயரை நீக்கிவிட்டது. 

பிரச்சினை எது?

முஸ்லிம் காங்கிரஸை நேசிப்போருக்கு, எம்.ரி. ஹசன்அலி என்ற தனிநபர் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக, மு.கா.வின் தாய்வீடான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் செயலாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமையே இங்குள்ள பிரச்சினையாகும். இது கட்சியின் யாப்பு திருத்தத்துடன் தொடர்புபட்டதே அன்றி, எம்.பி. பதவியுடன் தொடர்புபட்டதல்ல. ‘ஹசன்அலியின் அதிகாரம் குறைக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வதிகாரம் புதிய செயலாளருக்கு கூட வழங்கப்படவில்லை என்றும், அது தலைவரை நோக்கி குவியச் செய்யப்பட்டுள்ளது’ என்றும் மு.கா.வின் தவிசாளர் பசீர் கூறுகின்றார். எனவே, இதற்கு உரிய முறையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். 

மு.கா.வின் யாப்பின் படி 14 மாதங்களுக்குள் பேராளர் மாநாட்டை கூட்ட வேண்டும். அப்படியாயின், 2017 ஜனவரி 07 ஆம் திகதி அம்மாநாடு நடைபெற வேண்டும். தலைவர் தனது அதிகாரத்தின் படி 2 மாதங்கள் வரை இக்காலத்தை நீடிக்க முடியும் என்ற அடிப்படையில் இம்முறை 1 மாதம் நீடிக்கப்படலாம். இந்நிலையிலேயே ஜனவரி 2ஆம் திகதி உயர்பீடக் கூட்டத்தை கூட்டி, யாப்புத் திருத்தங்கள், செயலாளர் பதவி போன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இம்முறை உயர்பீடக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னரே தலைவர் ஹக்கீம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயர்பீடக் கூட்டத்தின் பின்னர் இருவரும் சந்தித்து உரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். மறுநாள் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று கூட்டாக விளக்கமளிக்கவுள்ளார். ஆக, இந்த பனிப்போர் இன்னும் உக்கிரமடைந்து முரண்பாடுகள் வலுத்துவிடக் கூடாது என்று எதிர்பர்hத்தவர்களுக்கு இப்போது ஒரு ஆறுதல் கிடைத்திருக்கின்றது. ஆனால், மு.கா. தலைவர் மீண்டும் ஒருமுறை சாணக்கியமாக ஏமாற்ற முனைகின்றாரோ என்ற சந்தேகம் இருக்கவே செய்கின்றது. 

கட்சியை, ஹசனலி தேர்தல் ஆணையாளரிடம் மாட்டிக் கொடுத்து விட்டதாக சோடிக்கப்பட்ட கதைகள், கட்சிக்குள் எந்தப் பதவியாவது இருந்தாலேயே எதையாவது செய்யலாம் என்ற நிலை, கட்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றின் அடிப்படையில் இதற்கு ஹசன்அலி உடன்பட்டிருப்பதாக தெரிகின்றது. 

ஆனால், ஹசன்அலி தனக்கு எம்.பி. பதவி முக்கியத்துவமானதல்ல செயலாளர் அதிகாரமே முக்கியத்துவம் என்று கூறிவந்தார். இப்போது அவர் ‘அதிகாரத்திற்கு’ முன்னதாக ‘எம்.பி. பதவியைப்’ பெறுவது அவரது இமேஜை பாதிக்கும் வாய்ப்பிருக்கின்றது. ‘இதற்குத்தான் இவர் ஆசைப்பட்டாரா’ என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கலாம். எம்.பி.க்காக காத்திருந்த மற்ற எல்லோரினதும் கோபம் இவர் மீது திருப்பப்படலாம். இப்படி இன்னும் எத்தனையோ நடக்கலாம். ஆனால், அடுத்த யாப்பு திருத்தத்தின் பின்னரே ஹக்கீம் – ஹசன்அலியின் இணக்கப்பாடு குறித்து ஒரு உறுதியான நிலைப்பாட்டு வர முடியும். 

எனவே அடுத்த பேராளர் மாநாட்டை காலதமதமின்றி நடத்தி, யாப்பில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது உரிய தீர்வை முன்வைப்பதற்கு ஏதுவாகவும், கட்சியின் எதிர்காலம் கருதியும் தலைவர் ஹக்கீம், ஹசன்அலியுடன் மட்மமுன்றி பசீர் போன்ற ஏனைய அதிருப்தியாளர்கள் எல்லோருடனும் சமரசம் காண வேண்டும். தலைவரும் அதிருப்தியாளர்களும் விட்டுக் கொடுத்துப் பேச வேண்டும். 

கவனம்! 
சமரசத்திற்காக காண்பிக்கப்படும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலர் வஞ்சிக்கப்பட்டதாக வரலாற்றுக் கதைகள் ஏராளம் உள்ளன. 

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 18.12.2016)