அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்திகளில் அமைச்சர் றிஷாத்தும் ஒருவராவார் : விஜித முனி சொய்ஸா

 

அமைச்சின் ஊடக்கப்பிரிவு

 

 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதாகவும் மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் பாராளுமன்றத்தில் முன் நின்று குரல் கொடுப்பதுடன் மாத்திரம் நின்று கொள்ளாது அவற்றை பல்வேறு பிரயத்தனங்களின் மத்தியிலே வென்றெடுக்கின்றார் என்று அமைச்சர் விஜித் விஜித முனி சொய்ஸா தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத்தின் வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சின் கீழான மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தை மன்னார் முருங்கனில் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். 

இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாத், சார்ள்ஸ் எம் பி, மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோருடன் அதிகாரிகள், விவசாயிகள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சொய்ஸா இங்கு உரையாற்றிய போது கூறியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தை நாம் அமைத்ததன் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். பாதைகளையும் கட்டடங்களையும், விமான  நிலையங்களையும் மாத்திரம் அமைப்பதன் மூலமோ அபிவிருத்திப் பணிகளை முடுக்கி விடுவதன் மூலமோ நமது நோக்கம் நிறைவேறாது. மாறுபட்ட சிந்தனைகளிலும் மனப் போக்குகளிலும் கடந்த காலங்களில் வாழ்ந்த நம் நாட்டு மக்களின் சிந்தனைகளில் தெளிவு ஏற்பட வேண்டும். மூவின மக்களுக்கும் நல்ல சிந்தனைகள் ஏற்படுவதன் மூலமே நாம் உரிய இலக்கை அடைய முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க இணைந்து உருவாக்கிய இந்த ஆட்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒரு முக்கிய பங்காளியாவார். தனிக்கட்சி ஒன்றை அமைத்தது மட்டுமன்றி இந்த ஆட்சியின் பங்குதாரராக இருக்கும் அவர் அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக விளங்குகிறார். பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட சில மக்களுக்காக மாத்திரமல்லாது பாதிக்கப்பட்ட அனைவருக்குமே குரல் கொடுப்பவர். இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு உதவுபவர். இந்த விடயங்களை பெருமையாக கூறிக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

அரசியல் வாதிகளான நாங்கள் இன, மத, குல, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பணியாற்றுவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன் பெற்றுக் கொடுக்க முடியும்.

இந்த நாடு மிகவும் அழகான நாடு வடக்கிலே தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர், கிழக்கிலே முஸ்லிம்கள் வாழ்கின்றனர், மலையகத்திலேயும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவ்வாறு பரந்துபட்டு வாழும் நமது மக்களுக்கிடையே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இருந்தால் இந்த நாட்டை மீளக கட்டியெழுப்ப் முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.