எப்.சீ.ஐ.டிக்கு அழைத்து பயமுறுத்துவதனால் நாம் அஞ்சி எமது போராட்டங்களை கைவிடப் போவதில்லை :நாமல்

 

ஹம்பாந்தோட்டை மக்களை வெளியேற்றிவிட்டு தனியார் நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிராக நாம் பேசும் போது எம்மை எப்.சீ.ஐ.டிக்கு அழைத்து பயமுறுத்த பார்க்கின்றனர். அதற்கெல்லாம் நாம் அஞ்சி எமது போராட்டங்களை கைவிடப் போவதில்லை என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நிதி மோசடி விசாரணைப்பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இவர் வருகைத்தந்திருந்த போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை 20 பேர்ச்சஸ் காணி ஒன்றில் தகவல் தொழில்நுட்ப மையத்திற்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்கவே இன்று அழைத்திருந்தனர்.

எனினும் இது இந்த காணி உட்பட 15 ஆயிரம் ஏக்கர் காணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்த விடயம் விசாரணைக்கு ஏதுவாக அமையாது.

அரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தல், அரச வளங்களை விற்பனை செய்தல் மற்றும் ஊழியர்களை ஒரே நாளில் பணியில் இருந்து நீக்குவதற்கு எதிராக பேசுவதால், அரசாங்கம் எங்களை விசாரணைகளுக்கு அழைத்து அச்சுறுத்த பார்க்கின்றது.

அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தொழிற்சாலைகளையும், முதலீட்டாளர்களையும் கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டார்.