மைத்திரிபால சிறிசேனவிற்கு தேவையான அனைத்து பாதுகாப்புக்களும் மலேசியா அரசாங்கத்தினால் தரப்படும் என மலேசியாவிற்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமென்றினை இன்று ஜனாதிபதி மேற்கொண்டுள்ள வேளையில் அவருக்கான பாதுகாப்பு தொடர்பில் வினாவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படவுள்ளமை குறித்து மலேசிய அரசிற்கு நன்கு தெரியும். இது ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மலேசியாவின் பாதுகாப்பு படை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் எந்த விதத்திலும் மாற்றமடையாது எனக் கூறினார்.
மேலும், இச்சந்திப்பில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளது. குறிப்பாக இளைஞர் ஒத்துழைப்பு சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த உடன்படிக்கைகள் அமையவுள்ளன என கூறியமை குறிப்பிடத்தக்கது.