‘டுவிட்டரில்’ கணக்கு துவக்கிய ஒபாமா: 12 மணி நேரத்தில் 15 லட்சம் பேர் பார்த்தனர் !

 images

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதிபராகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது தான், சமூக வலைதளங்களில் ஒன்றான, ‘டுவிட்டரில்’ கணக்கு துவக்கி உள்ளார். அவர் கணக்கு துவங்கிய, 12 மணி நேரத்திற்குள், அவரின் டுவிட்டர் பக்கத்தை, 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அமெரிக்காவின், 44வது அதிபரான பராக் ஒபாமா, அதிபராக பதவியேற்று, ஆறு ஆண்டுகளுக்குப் பின், தற்போது தான், டுவிட்டரில், கணக்கை துவக்கி உள்ளார். இதை, அவர் தன் டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையும் இதை உறுதி செய்து உள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: 

 அதிபர் ஒபாமாவின் டுவிட்டர் கணக்கு, அமெரிக்க மக்களுடன் அவர் நேரடி தொடர்பில் இருக்க, புதிய வாய்ப்பாக அமையும். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் தகவல்களை, மக்கள் பார்க்கலாம். ஒபாமா தன் நிர்வாகம், வெளிப்படையானதாக வும், வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையிலும், இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர்.

 எனவே, ஒபாமாவின் டுவிட்டர் பக்கம் மூலம், மக்கள் தங்களின் கோரிக்கைகளை நேரடியாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா இதுவரை, 65 பேரை மட்டுமே, பின்பற்றி வருவதாக தெரிகிறது. அவர்களில் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் இல்லை. அவரது நிர்வாக அவை உறுப்பினர்கள், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள், முக்கிய துறைகளின் தலைவர்கள் மற்றும் சிகாகோவில் உள்ள சில பிரபல விளையாட்டு குழுக்கள் போன்றோர் மட்டுமே, அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

 சமூக வலைதளங்கள் மூலமாக, உலகமெங்கும் பிரபலமடைந்து வரும், இந்திய பிரதமர் மோடியின் செல்வாக்கினால் கவரப்பட்டே, அதிபர் ஒபாமா, டுவிட்டரில் கணக்கு தொடங்கி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், ஒபாமாவின் வழி தனி வழி என, அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.