சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த்தது மும்பை !

213631.3

 ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது மும்பை. நேற்றைய தகுதிச் சுற்று-1ல் சொதப்பிய சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் பைனல் வாய்ப்பு முடிந்து விடவில்லை. இனி தகுதிச் சுற்று-2ல் வெற்றி பெறும் வரை சென்னை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
மும்பையில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் ‘தகுதிச் சுற்று- 1’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த சென்னை, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
மும்பை அணியில் மாற்றம் எதுவும் இல்லை. சென்னை அணியில் பிரண்டன் மெக்கலம், ஈஷ்வர் பாண்டேவுக்கு பதில் முறையே டுவைன் ஸ்மித், மோகித் சர்மா இடம் பெற்றனர்.

213627.3
சிம்மன்ஸ் அரைசதம்:
மும்பை அணிக்கு பார்த்திவ் படேல், சிம்மன்ஸ் அசத்தல் துவக்கம் கொடுத்தனர். முதல் 4 ஓவர்கள் அடக்கி வாசித்த இவர்கள், பின் அதிரடிக்கு மாறினர். அஷ்வின் வீசிய போட்டியின் 5வது ஓவரில் சிம்மன்ஸ் 2 சிக்சர்கள் விளாசினார். இவர், நெஹ்ரா பந்தையும் சிக்சருக்கு அனுப்ப, முதல் 6 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது மும்பை.
பிராவோ ஆறுதல்:
சிம்மன்ஸ் 38 வது பந்தில் அரைசதம் எட்டினார். பிராவோவை இம்முறை சற்று முன்னதாகவே அழைத்தார் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ் படேல் (35), பிராவோ பந்தில் அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் சிம்மன்ஸ் (65), ஜடேஜா ‘சுழலில்’ சிக்கினார்.
போலார்டு விளாசல்:
பின் வந்த போலார்டு, நேகி ஓவரில் 2 சிக்சர்கள் அடித்தார். ரோகித் சர்மா (19), பாண்ட்யா (1), ராயுடு(10) விரைவில் அவுட்டாக, ஸ்கோர் வேகம் குறைந்தது. இருப்பினும் அதிரடியை நிறுத்தாத போலார்டு, பிராவோ, மோகித் பந்துகளை சிக்சருக்கு விரட்டினார். இவர் 17 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. சுசித் (1), ஹர்பஜன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
துவக்கம் மோசம்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இவரது ‘வேகத்தில்’ டுவைன் ஸ்மித்(0) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். பின் மெக்லீனகன் பந்துவீச்சில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய டுபிளசி நம்பிக்கை தந்தார். மைக்கேல் ஹசி(16) நிலைக்கவில்லை.
ஹர்பஜன் அபாரம்:
இந்த நேரத்தில் போட்டியின் 11வது ஓவரை வீசிய ஹர்பஜன் இரட்டை ‘அடி’ கொடுத்தார். 2வது பந்தில் ரெய்னாவை(25) வெளியேற்றினார். 3வது பந்தில் தோனியை(0) அவுட்டாக்கினார். 4வது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. 6வது பந்தில் பிராவோ கொடுத்த ‘கேட்ச்சை’ ஹர்பஜன் கோட்டைவிட, சென்னை வீழ்ச்சிக்கு வித்திட்ட இந்த ஓவர் ஒருவழியாக முடிந்தது.
இதற்கு பின் சரிவு தொடர்ந்தது. சுச்சித் ‘சுழலில்’ டுபிளசி(45)சிக்கினார். மந்தமாக ஓடிய பிராவோ(20), ரன் அவுட்டானார். நேகி(3), ரவிந்திர ஜடேஜா(19) நிலைக்கவில்லை. அஷ்வின்(23) ஆறுதல் தந்தார். சென்னை அணி 19 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
மும்பை சார்பில் மலிங்கா அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

213623.3

தோனி ‘200’
ஒட்டுமொத்தமாக 200 ‘டுவென்டி-20’ போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையை நேற்று பெற்றார் தோனி.

100, 1000
நேற்று பார்த்திவ் படேலை அவுட்டாக்கிய சென்னையின் பிராவோ, ஐ.பி.எல்., அரங்கில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ‘ஆல் ரவுண்டர்’ என்ற பெருமை பெற்றார். இதுவரை 89 போட்டியில் 1134 ரன்கள், 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

650
மோகித் சர்மா வீசிய போட்டியில் 19வது ஓவரின் கடைசி பந்தை விளசினார் மும்பை வீரர் போலார்டு. இது இத்தொடரின் 650வது சிக்சராக அமைந்தது.

அம்பயர் மோசம்
நேற்று மலிங்கா வீசிய முதல் ஓவரில் டுவைன் ஸ்மத்திற்கு (0), அம்பயர் ரிச்சர்டு இலிங்வொர்த் (இங்கிலாந்து) அநியாயமாக எல்.பி.டபிள்யு., கொடுத்தார். ‘ரீப்ளேவில்’ பந்து, ‘லெக்’ திசையில் சென்றது தெளிவாக தெரிந்தது. அம்பயரின் இந்த தவறான முடிவு சென்னை அணிக்கு துவக்கத்திலேயே பேரிடியாக அமைந்தது.

எதிர்பார்த்தது நடந்தது
ஐ.பி.எல்., விதிமுறைப்படி தகுதிச் சுற்று- 1ல் வென்ற மும்பை அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. தோற்ற சென்னைக்கு இன்னொரு வாய்ப்பு தரப்படும். இன்று நடக்கும் ‘எலிமினேட்டரில்’ வெற்றி பெறும் அணியுடன் வரும் 22ல் நடக்கும் தகுதிச் சுற்று-2ல் மோத வேண்டும்.
இப்போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால், சென்னை இங்கு விளையாட வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதே போல நேற்று சென்னை தோல்வி அடைந்தது. இனி தகுதி சுற்று-2ல் சென்னை வென்றால், வரும் 24ல் நடக்கும் பைனலில் மீண்டும் மும்பையை சந்திக்கலாம்.

3வது முறை
நேற்று அபார வெற்றி பெற்ற மும்பை அணி மூன்றாவது (2010,2013, 2015) முறையாக ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில், 2013ல் கோப்பை வென்றது.