வளர்ச்சியை முடக்கும் மோடி’: ராகுல் குற்றச்சாட்டு !

Unknown

 ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சிப் பணிகளை எல்லாம் முடக்கி விட்டது. முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில் செய்தவற்றை எல்லாம், தங்கள் ஆட்சியின் சாதனைகளாக கூறி, பெருமை கொள்கிறது,” என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.  

உ.பி.,யில் உள்ள, தன் அமேதி தொகுதியில், நேற்று வளர்ச்சிப் பணிகள் பலவற்றை துவக்கி வைத்த, ராகுல் கூறியதாவது: 

 காங்., ஆட்சியில் இருந்த போது, அனைத்து பணமும், அமேதி தொகுதிக்கு செல்வதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், இன்று அமேதி தொகுதிக்கு, எதுவுமே செய்யப்படவில்லை என்றும் குறை கூறுகின்றனர். வளர்ச்சிப் பணிகளை நிறுத்தி வைப்பதையே, பா.ஜ., அரசு வழக்கமாக கொண்டுள்ளது. அதேநேரத்தில், முந்தைய ஆட்சியின் சாதனைகளை எல்லாம், தங்களின் சாதனைகள் எனக்கூறி, பெருமை கொள்கிறது. அமேதியில், மெகா உணவு பூங்கா அமைக்க, முந்தைய அரசு திட்டமிட்டது. ஆனால், தற்போதைய மோடி அரசு, அதை ரத்து செய்து விட்டது; இதன்மூலம், விவசாயிகள் பலனடையும் கனவை தகர்த்து விட்டது. மத்திய அரசு, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. 

மத்திய அரசு பழிவாங்க நினைத்தால், என்னைத்தான் பழிவாங்க வேண்டும். அதை விடுத்து, விவசாயிகளையும், ஏழைகளையும் பழிவாங்கக் கூடாது. அப்படி அவர்கள் என்னை பழிவாங்க நினைத்தால், அது, எனக்கு பலன் தரும்; நான் அதிக புத்துணர்வுடன் செயல்பட வழிவகுக்கும். இவ்வாறு, ராகுல் கூறினார்.