சென்னையில் வர்தா புயல் காரணமாக காற்று சுழற்றி, சுழற்றி வீசுகிறது. இரைச்சலுடன் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக மாநிலத்தில் இதுவரையில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்தா புயல் காரணமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவு காற்று சுழற்றி, சுழற்றி வீசி கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மரக்கிளைகள் விழுந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கி போயினர். வார்தா புயல் காரணமாக சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது மட்டுமல்லாமல் தொலைத் தொடர்பு கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து உள்ளது.
வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், கூரைகள், தட்டிகள் உள்ளிட்டவை காற்றில் பறந்தன. பல இடங்களில் வீட்டுக்கு மேல் வைக்கப்பட்டு இருந்த சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகளும் காற்றின் ஆவேசம் தாங்க முடியாமல் தூக்கி வீசப்பட்டது.
வார்த் புயல் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8008 பேர் அரசின் 95 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10, 754 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6 தேசிய பேரிடர் மீட்பு குழு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ராணுவமும் தயார் நிலையில் உள்ளது மீட்பு பணிகளுக்கு.