என்னை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு சமூகத்தின் எதிர்கால பிரச்சினைகள் தொடர்பில் சிந்தியுங்கள் !!

 
நல்ல நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையை சிலர் திரிவுபடுத்தி மக்களை குழப்ப முயற்சிப்பதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் – பிரச்சினைகளை எதிர்கொள்ள முஸ்லிம்கள் அனைவரும்  ஒற்றுமைப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக விமர்சனங்கள் மாத்திரம் முன்வைக்கப்பட்டால் முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் எம்.பிக்கள் தயங்கி பின்வாங்குவார்கள் என்றார். 
hisbullah
அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அண்மையில் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை தொடர்பாக ஏராளமானவரகள் அதனை வரவேற்று பாராட்டுக்களையும் – நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். அதேபோன்று, இன்னும் சிலர் எனது உரைக்கு எதிரான விமர்சனங்களையும் – ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 
பொதுபலசேன உள்ளிட்ட சிங்கள தேசிய வாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முஸ்லிம்களுக்கும் – இஸ்லாத்துக்கும் எதிரான பிரசாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் எம்மாலான முயற்சிகளை செய்து வருகின்றோம். இவ்வாறான நிலையில் அண்மையில், நீதியமைச்சர் சிங்கள தேசியவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார். இதன்பின்னர், ‘இனிமேல் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறுத்தப்படும்’ என்ற வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியும் சகல தரப்பினருடனும் பேசியிருந்தார். இதன்போதும் ‘கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’ என்ற உறுதிமொழி எமக்கு வழங்கப்பட்டது. 
எனினும், இந்த வாக்குறுதிகளை மீறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மீண்டும் சிங்கள தேசிய வாதிகள் ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்பத்தில் அல்லாஹ்வையும் – புனித அல்குர்ஆனையும் கடுமையாக அவர்கள் விமர்சித்திருந்தனர். இது தொடர்பில் அரசமட்ட தலைவர்கள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாங்கள் கலந்துரையாடியபோது அவர்களது நிலைப்பாடு எமக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை நாங்கள் மேலும் முக்கியத்துவம் கொடுத்து ஆராயும்போது மாத்திரமே நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். அதன் அடிப்படையிலேயே முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் இந்த விடயத்தை கடுமையாக பேசுவது என நாங்கள் தீர்மானித்தோம். 
குறித்த தினம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பாராளுமன்றத்தில் இருப்பதை சந்தர்ப்பமாக கருதி எமது சமூகத்தின் பிரச்சினையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நல்லநோக்கத்துடன் இரண்டு ரக்ஆத் சுன்னத்தொழுகையை நிறைவேற்றிவிட்டே நான் அன்றைய தினம் எனது உரையை ஆற்றியிருந்தேன். நான் மட்டுமல்ல அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் அன்றைய தினம் ஆவேசமாக பேசியிருந்தனர். 
அல்லாஹ்வுடைய நாட்டம் எனது உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் என்னுடன் கலந்துரையாடி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தனர். 
நல்ல நோக்கத்துடன் அல்லாஹ்வுக்காகவே இவ்வாறானதொரு உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியிருந்தேன். மாறாக அரசியல் நோக்கத்துக்காவோ, மக்கள் என்னை பாராட்ட வேண்டும் – புகழ வேண்டும் என்ற ஆசையிலோ அல்லது விமர்சனங்களை பெறவேண்டும் என்பதற்காகவோ இந்த உரையை நான் ஆற்றவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த உரையை புகழ்பவர்கள் – விமர்சிப்பவர்கள் அனைவரும் அதனை நிறுத்தி விட்டு எமது சமூகத்தின் எதிர்கால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயுமாறும் -சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 
நாங்கள் ஏராளமான பிரச்சினைகளை அரசியல் ரீதியாகவும் – சமூக ரீதியாகவும் எதிர்நோக்கியுள்ளோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டும். இவற்றை எதிர்ப்பதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எமது நிலைப்பாட்டை தெளிவாக அரசுக்கு கூறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிம் தலைமைகளும் தயாராக வேண்டும். கட்சி பேதங்களை மறந்து நாங்கள் ஒற்றுமைப்படும் பட்சத்திலேயே அது சாத்தியமாகும். 
“முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது நீங்கள் பேசினீர்களா? இப்போது ஏன் பேசுகிறீர்கள்?” என பல விமர்சனங்கள் என்மீது முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் அன்றும் இவ்வாறே பேசினோம். யதார்த்தமான நிலையை தெளிவாக பேசினோம். ஆனால், அப்போது எம்மால் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் பேசுகின்றோம். எனவே, “பேசினோமா – பேசவில்லையா” என்ற கடந்த கால சம்பவங்களை வைத்து ஒருவரை விமர்சித்து பல சந்தேகங்களை கிளப்பிவிடுவதால் இனிமேல் இவ்வாறு எந்த அரசியல் தலைமையும் பேசுவதற்கு முன்வரமாட்டார்கள் – அவர்கள் தயங்குவார்கள் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். 
பேசப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் பேசப்பட்டால் அதனை வரவேற்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவ்வாறு பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுங்கள்.
நாங்கள் ஒரு சோதனைக் காலத்தில் உள்ளோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். பொதுபல சேன போன்ற அமைப்புக்கள் மாத்திரமல்ல இப்போதுள்ள பிரச்சினை. அரசியலமைப்பு திருத்தம் – தேர்தல் முறையில் திருத்தம் போன்ற பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல யோசனைகள் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளன.  இது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக பேசிவருகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் இணைந்து பேசவேண்டிய தேவையுள்ளது. எனவே, தொடர்ச்சியாக விமர்சனங்கள் மாத்திரம் முன்வைக்கபடும் போது இது தொடர்பில் பேசுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள் என்பதை உணரவேண்டும். 
நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கலீமா சொன்ன முஸ்லிம்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து எதிர்க்க வேண்டும். இது தேர்தல் காலம் அல்ல. ஒரு கட்சி இன்னொரு கட்சியை விமர்சிப்பதும், ஒருவர் இன்னொருவரை விமர்சிப்பதுமாக இருப்போமானால் எமது உரிமைகளை வென்றெடுக்க எம்மால் முடியாது போய்விடும் என்பதையும் முஸ்லிம் சமூகம் உணரவேண்டும் – என்றார்.