டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவியது..? விசாரணை நடத்துமாறு ஒபாமா அதிரடி உத்தரவு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவியது என அந்த நாட்டின் மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ. குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

barack-obama

அமெரிக்காவில் கடந்த மாதம் 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. கடும்போட்டி நிலவிய இந்த தேர்தலில் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக கிடைத்தது. அவர் 6 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 6 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 682 ஓட்டுகள் பெற்றார்.

ஆனால் எலெக்டோரல் ஓட்டு என்னும் தேர்தல் சபை ஓட்டுகள், டிரம்புக்கு அதிகமாக கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 306 தேர்தல் சபை ஓட்டுகளையும், ஹிலாரி 232 தேர்தல் சபை ஓட்டுகளையும் பெற்றனர்.

அடுத்த மாதம் 20-ந் தேதி டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவாளரான டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷியா உதவி இருக்கிறது என்று மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ., குற்றம் சாட்டி உள்ளது. சி.ஐ.ஏ. கூறியுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:-

* ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு, டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி செய்ய தீர்மானித்தது.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற ரஷிய அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர், கவனம் செலுத்தினர்.

* ரஷிய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு, ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ-மெயில்களை இணையதளத்தில் தினந்தோறும் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின்மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல ஏடுகளான வாஷிங்டன் போஸ்ட்டும், நியூயார்க் டைம்ஸ்சும் இது குறித்த தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இப்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, இணையதளங்களில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட திருட்டுகள் பற்றி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஒபாமா அதிரடியாக நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இது குறித்து உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி, ஜனவரி 20-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அவர் பணித்துள்ளார்.

இதை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுகளை ரஷிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

டிரம்ப் குழுவினரும் மறுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டிய அதே நபர்கள்தான் இப்போது இந்த குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்” என்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றபோது, தேர்தல் பிரசாரத்தின்போது ரஷியா தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.