க.கிஷாந்தன்
மலையகத்தில் பல தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குடி நீரை பெற்றுகொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது.
குறிப்பாக அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட நெதஸ்டல் பிரிவில் வாழும் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் சுத்தமான குடி நீர் இல்லாமல் பெரும் சிரமங்களை சந்திப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தில் அதிகமான இடங்களில் ஊற்று நீர் இருக்கின்ற போதிலும் இம்மக்கள் சுத்தமான நீரை பருகமுடியாமல் சேற்று நீரை பருகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை இங்கு சுத்தமான குடி நீரை பெற்றுகொள்ள அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
நீரை பெற்றுகொள்வதற்காக வைத்துள்ள நீர் தாங்கிகள் மற்றும் நீர் ஓடைகளை தோட்ட நிர்வாகம் சுத்தம் செய்துகொடுப்பதில்லையெனவும் பொருத்தப்பட்டுள்ள நீர் குழாய்களும் மிகவும் மோசமாக உடைந்து கானப்படுவதாகவும் இதனை எந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அக்கறை காட்டாமல் அசமந்தபோக்கில் இருப்பதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை குழாயிகளில் வடியும் சொட்டு நீர்க்காக பல மணிநேரம் காத்திருக்கும் இவர்கள் தங்களின் தேவைகளை உரிய நேரத்தில் செய்துகொள்ள முடியாமல் அதிகாலை நேரத்தில் தொழிலுக்கு நேரதாமதமாக செல்லும் போது தோட்ட உத்தியோகஸ்தர்களால் தொழில் வழங்க மறுப்பதாகவும் இதனால் தொழில் இல்லாமல் வருமானத்தினை இழப்பதாக தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தில் இருந்து தொழிலுக்காக வெளியிடங்களுக்கு செல்பவர்களும் தூர இடங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களும் காலை வேளையில் தங்களுடைய தேவைகளை செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது.
அத்தோடு மழைக்காலங்களில் நீர் குழாய்களில் இருந்து வரும் நீர் மணல் கலந்து சேற்று நீராக வருவதாகவும் இதனை தாம் வடிகட்டி பருகிவருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான அசுத்தமான நீரை பருகுவதால் சிறுவர்கள் முதல் பெரியோர்களுக்கு பல்வேறுப்பட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிகாலத்தில் சிறுநீரக நோய் வரக்கூடும் என அச்சத்தில் இருப்பதாக கூறும் இவர்கள் மலையக பகுதியில் நீர் வலம் அதிகமாக இருக்கின்றபோதிலும் தாம் சேற்று நீரை பருகுவதுடன் ஒரு குடம் நீர்க்காக பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்வதாக இத்தோட்ட மக்கள் மனம் நொந்துபோகின்றனர்.
எனவே மலையக அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உடனடியாக இவர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுகொடுப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.