முஸ்லீம் எம்.பிக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ! நீதி அமைச்சரும் இணைகிறார் !

 

இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடவுள்ளார். 
collage_fotor-2
முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசின் செயற்பாடுகள் குறித்து கடும் தொணியில் பேசியிருந்தார். 
அவரது உரையில்,
இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை யாராலும் தடுக்க முடியாது எனவும், பொதுபல சேன பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆகியோர் உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.  
இந்நிலையில் பிக்குகளை கைது செய்யும் விவகாரத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே கடும் விவாதமும் இடம்பெற்றிருந்தது. 
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் குறித்த தினமே நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சமரசப்படுத்தியதுடன், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர். 
இவ்வாறான பின்னணியில், இன்று மாலை 3 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் முஸ்லிம் எம்.பிக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இக்கலந்துரையாடலில் நீதியமைச்சர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.