-அமைச்சின் ஊடகப்பிரிவு
சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதும் இற்றைவரை அவர் ஏன் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
’வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என முஸ்லிம்களாகிய நாங்கள் நம்பியிருக்கின்றோம். எங்கள் ஏக இறைவனை, மத குரு ஒருவர், மனிதர் பேசுகின்ற முறைகளுக்கு அப்பாலே சென்று மிகவும் மோசமாகவும் இழிவாகவும் நிந்தித்திருக்கிறார். இதனால் இந்த நாட்டில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் மாத்திரமின்றி உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே கவலை கொண்டிருக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை பொலிஸ் தலைமையகம் சென்று இவருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் முறைப்பாடு செய்திருந்தோம். என்னைப்போன்று இன்னும் பலர் அந்த தேரருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்ட போதும் இற்றைவரை அவருக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாற்றமாக அவரைச் சிலர் அழைத்துப் பேசியிருக்கின்றார்கள். சட்டமென்றால் எல்லோருக்கும் சமமானதே. ஒரு நாட்டிலே இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது.
இந்த உயர் சபையிலே கௌரவ வியாளேந்திரன் எம் பியும் மட்டக்களப்பில் மத குரு ஒருவர் தமிழ் கிராம சேவகர் ஒருவருடன் நடந்து கொண்ட முறையை சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறானவர்களுக்கு தண்டனை கொடுக்க ஏன் தயங்குகின்றீர்கள்? சட்டத்தை எல்லோருக்கும் சரியாக, சமனாக நடைமுறைப்படுத்தினால் தான் இவ்வாறானவர்களின் அடாவடித்தனங்களை அடக்க முடியும். நீதியமைச்சர் சட்டத்துறையிலே வல்லமை படைத்தவர். அவர் ஒரு சட்ட முதுமாணியும் கூட. எனவே எந்த தரப்பு சட்டத்தை மீறினாலும் நீதியைச் சரியாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த உயர் சபையிலே வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.
தற்போதைய ஆட்சியில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து முஸ்லிம் விவகாரங்களுக்கென நான்கு அமைச்சுக்களை உருவாக்கித் தந்த ஜனாதிபதிக்கும் பிரமருக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு ரூபா 16 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் பல பள்ளிவாசல்களும் மத்ரசாக்களும் அழிந்தும் உடைந்தும் கிடக்கின்றன. இவற்றை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அதே போன்று மீலாத் விழாக்கள் நடாத்தப் படுகின்றன. 10% சமூகத்துக்குப் பணியாற்றும் இந்த அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூபா 16 மில்லியன் இந்த வேலைகளுக்குப் போதுமா என நான் கேட்கின்றேன். இந்தப்பணத்தில் என்ன செய்ய முடியும்? அமைச்சர் ஹலீம் தனது அமைச்சுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் அன்பாய் வேண்டுகின்றேன். அதன் மூலமே இந்த அமைச்சின் ஊடாக நல்ல பல பணிகளை முன்னெடுக்க முடியும்.
இந்த அமைச்சு நாடாளாவிய ரீதியில் உள்ள மதரசாக்கல்வியை ஒருமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ம்தரசாக்களிலிருந்து வெளியேறும் மாணவர்களைக்கொண்டு ஏனைய இன மக்கள் இஸ்லாத்தைப் பற்றிக் பிழையான அபிப்பிராயங்களை களையக்கூடியதான இண நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அதே போன்று முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் மேல் மாடிக்கட்டிடங்களை புனரமைத்து ஆக்கப்பணிகளுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் திணைக்களத்திற்கு தமது தேவைகளுக்காக வருகின்ற உலமாக்களும், கதீப்களும் ஒரே நாளில் திரும்ப முடியாதிருக்கின்றனர். எனவே அறைகளை அமைத்து குறைந்த செலவில் அவர்கள் தங்க வசதிகளை செய்து கொடுக்க முடியும்.
கடந்த சில வருடங்களாக ஹஜ்ஜுக்கு அனுப்பும் நடைமுறைகளை அமைச்சர் ஹலீம் திருப்தியாக செய்து வருகின்றார். எனினும் ஹஜ் பயணம் தொடர்பான சட்டமொன்றை பாராளுமன்றில் உருவாக்க அவர் நடவடிக்கை எடுப்பது சாலச் சிறந்ததென நான் கருதுகிறேன்.
தெகிவளையில் ’அல் மத்ரசா பௌசுல் அக்பர்’ எனும் பள்ளிவாசல் தொடர்பில் தினமும் பிரச்சினைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மத்ரசாவில் மார்க்கக் கல்வி இடம்பெறுவதோடு அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் அதனை தமது தொழுகைக்காக பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்கள் ஐவேளை தொழ வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தப் பிரதேசத்தில் 345 குடும்பங்கள் வாழ்கின்றன. எனவே அவர்கள் இந்த மத்ரசாவில் கூட்டுத்தொழுகையில் ஈடுபடுகின்றனர். எங்களைப் பொறுத்த வரையில் பள்ளிவாசல்களுக்கும் மத்ரசாக்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இவற்றை நீங்கள் தப்பாக எண்ணாதீர்கள். பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதத்தைத் தூண்டும் எந்த செயற்பாடுகளும் பள்ளிவாசல்களிலோ மத்ரசாக்களிலோ நடப்பதில்லை, நடக்கவும் மாட்டாது என நான் இந்த சபையில் முஸ்லிம்கள் சார்பாக மிகவும் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அல் மத்ரஸா பௌசுல் அக்பர் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு 2016 நவம்பர் 17 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1982 இலக்கம் 44 பிரிவைச் சுட்டிக்காட்டி இந்த மஸ்ஜிதில் அநாவசியமாக கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும் தொடர்ந்து அங்கே வேலைகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை தகர்த்தெறிவோம் என அடாவடித்தனமான முறையில் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இந்த மத்ரசாவுக்கான கட்டிட அனுமதி அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம், பள்ளி நம்பிக்கையாளர் சபையின் நியமனக் கடிதம் முஸ்லிம் விவகாரத்திணைக்களத்தின் பதிவு இலக்கம் எல்லாம் முறையாக உள்ளன. அத்துடன் தெகிவளை கல்கிஸ்ஸ மேயர், நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவர், அதிகார சபையின் சட்டத்திணைக்களம் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட கடிதங்களும் உள்ள போதும் அங்கு வாழும் மக்கள் நிம்மதியாக தமது கடமைகளில் ஈடுபட முடியாது தவிக்கின்றனர். எனவே இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பான ஆவணங்களை இந்த சபையில் தாம் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.