மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு !

தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக செயற்பட மக்கள் வாக்களிக்கவில்லை, அதற்கான இடமும் கொடுக்கப்படாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு விஷேட பேச்சு வார்த்தை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் முக்கிய விடயமாக ஆலோசிக்கப்பட்ட விடயம், கூடிய விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே.

இதன்போது ஜனாதிபதி முக்கியமாக தெரிவித்தது என்னவெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டும்.

அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதன் படி நாங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமானதாகும். தேர்தலுக்காக பயந்து அதனை நாம் பிற்போடவில்லை. 

இதேவேளை இந்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முக்கியமான விடயம் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதாவது மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அவர் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

maithiri

நாட்டில் ஊழல்களை ஒழிப்பது, தேர்தல் மற்றும் அரசியல் முறையை மாற்றியமைப்பது போன்றவை அவற்றில் முக்கியமானதாகும். அவற்றினை தாண்டிச் சென்று அவரது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது எனவும் தெளிவாக கூறியுள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவே நாம் ஆயத்தமாக இருக்கின்றோம். அதற்னான செயற்பாடுகளையும் நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

மேலும் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக செயற்பட மக்கள் வாக்களிக்கவில்லை, அதற்கான இடம் கொடுக்கப்படாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அனைவரும் இணைந்து நாட்டிற்காக சேவையாற்றவே வாக்களித்துள்ளனர். அதனை முன்னிலைப்படுத்தியே நாம் இப்போது எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.