மீள்குடியேற்ற அமைச்சு மீது சுமத்தப்படும் நியாயமான விமர்சனங்கள் ஆராயப்படும்: ஹிஸ்புல்லாஹ்

 
 
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு மீது முன்வைக்கப்படும் விமர்சணங்களில் நியாயமான விமர்சணங்கள் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
hisbullah hizbullah
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் அதிக தொடர்புடைய முக்கிய அமைச்சாகும். யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மக்களது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய அமைச்சு. 
இந்த அமைச்சு தொடர்பில் இன்றைய (நேற்று) விவாதத்தில் ஏராளமான விமர்சணங்கள் – குறைகள் முன்வைக்கப்பட்டன. அதிலுள்ள நியாயமான விமர்சணங்களை ஏற்றுக் கொண்டு எதிர்வருகின்ற காலங்களில் இந்த அமைச்சின் ஊடாக மக்களது குறைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது அமைச்சினால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் அமைச்சின் அதிகாரிகள் இதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், அடிக்கடி ஏற்படுகின்ற தடைகள் மற்றும் நிர்வாக தாமதங்கள் காரணமாக குறிப்பிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது. 
குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வீடில்லா பிரச்சினை என்பது மிகமுக்கியமானதாகும். இதற்கு தீர்வு காணப்பட்டு அனைத்து வசதிகளும் கொண்ட நிரந்த வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பாகும். அரசு தனது அந்த கடமையை எமது அமைச்சுக்கு வழங்கியுள்ளது. 
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சுயதொழில், விதவைகளது வாழ்வாதார பிரச்சினை போன்ற வடகிழக்கில் உள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எமது அமைச்சு தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளது.- என்றார்