பொது பலசேனாவின் கடிதத்துக்கு உலமா சபை பதில் வழங்கக் கூடாது:எம்.ரி. ஹஸன் அலி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையையும் முஸ்லிம்களையும் படுமோசமாக விமர்சித்துவரும் குர்ஆனை அவமதித்து பேசும் பொது பலசேனாவின் கடிதத்துக்கு உலமா சபை பதில் வழங்கக் கூடாது.

hasan ali slmc

குர்ஆனைப் பற்றி தெளிவுகள் வேண்டுமென்றால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகா நாயக்க தேரர்களுக்கே பதில் அளிக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு குர்ஆன் அத்தியாயங்களுக்கு விளக்கம் கோரி உலமா சபைக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உலமா சபை முஸ்லிம்களின் சமயம் தொடர்பில் உயரிய சபையாகும். பொது பலசேனா தொடராக முஸ்லிம்களின் கலாசாரத்தையும் மார்க்க கோட்பாடுகளையும் இழிவுபடுத்தி வருகிறது.

அல்லாஹ்வைப் பற்றியும் ஞானசார தேரர் மோசமாக கருத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பொது பலசேனாவை ஓர் அமைப்பாக அங்கீகரித்து அந்த அமைப்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எமக்கில்லை. எனவே இது தொடர்பில் உலமா சபை பதில் அளிப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதில் அளிப்பது அவசியமென்றால் பௌத்தர்களின் உயரிய பீடமான மல்வத்த, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கே அளிக்க வேண்டும்.

பொது பலசேனா அமைப்பு குர்ஆன் தொடர்பான விளக்கங்களைக் கோரி நிற்பது ஏதோவோர் சூழ்ச்சியினால் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே உலமா சபை நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.