முஸ்லிம்களின் கவனம் திசை திருப்பப்படுகின்றதா?

3d0c028d32791c2d12582310df4b4ed9

கைகளில் பெறுமதியான பொருட்களை வைத்துக் கொண்டு அதை தருவதற்கு அடம்பிடிக்கின்ற குழந்தைகளிடமிருந்து அவற்றை பத்திரமாக திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக, வீட்டில் உள்ளவர்கள் பல உத்திகளை கையாள்வார்கள். குறிப்பாக, கையில் இருக்கும் பொருளை விடவும் பெறுமதி குறைந்த ஆனால் பார்ப்பதற்கு வர்ணயமயமாக, கண்ணைக்கவரும் ஒரு விளையாட்டுப் பொருளை கையில் கொடுத்துவிட்டு, அதாவது அப்பிள்ளையை பராக்குக்காட்டிவிட்டு, பிள்ளை அதில் லயித்திருக்கின்ற நேரத்தில் அப் பெறுமதியான பொருளை பறித்தெடுத்துக் கொள்வதுண்டு.

 

நாட்டில் கடந்த பல மாதங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள், கடும்போக்கு இயக்கங்களின் நடவடிக்கைகள், அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, சட்டத்தின் ஆட்சி பற்றியெல்லாம் நாம் பலவாறாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகள் பெரும்பாலும் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் இனவாத சிந்தனையின் வெளிப்பாடுகள் என்பதே நம்மில் பலரது அபிப்பிராயமாக இருக்கின்றது. அதற்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அதேபோல் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதித்திட்டங்களின் அடிப்படையிலேயே இனவெறுப்பு சம்பவங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் புறக்கணிக்கக் கூடியதல்ல.

 

எவ்வாறாயினும், இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது தலையாய முக்கியத்துவமான விடயங்களில் கவனம் செலுத்துவதை விட்டும் அவர்களை திசைதிருப்புவதற்காக, அதாவது வேறு பிரச்சினைகளில் அல்லது சிறிய விடயங்களில் கவனத்தை குவிவடையச் செய்வதற்கான ஒரு கைங்கரியமும் இதில் இருக்கின்றதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. பெறுமதியற்ற, நீண்டகாலத்திற்கு உதவாத பொருட்களை முஸ்லிம்களுக்கு பராக்குக் காட்டுவதற்காகவே இவ்வாறான ‘விளையாட்டுப் பொருட்கள்’ கையில் கொடுக்கப்படுகின்றதா என்ற ஐயப்பாடு ஏற்படுகின்றது.

 

வேறு வார்த்தைகளில் கூறினால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களின் உண்மையான நோக்கம், நிகழ்ச்சி நிரல் முஸ்லிம்களை திசைதிருப்புவது அல்ல என்றாலும் கூட, ‘அட்டாஅவதானிகளாக’ கருதப்பட முடியாத இலங்கை முஸ்லிம்கள் இனத்துவ நெருக்குவாரங்களால் வேறு பிரச்சினைகளின்பால் திசைமுகப்பட்டுப் போகின்றனரா? என்ற வலுவான கேள்வி எழவே செய்கின்றது. அண்மைக்காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து நோக்கினால் இந்தக் கேள்வி எங்கிருந்து தோற்றம் பெறுகின்றது என்பது புரியும்.

ஆட்சி மாற்றம்

பொதுபலசேனா, இராவணபலய, சிங்ஹல ராவய மற்றும் சிங்ஹலே போன்ற கடும்போக்கு இயக்கங்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இவ்வாறான சக்திகள் தமது தீவிரத்தன்மையை வெளிக்காட்டி இருந்தன. தம்புள்ளையிலும் அழுத்கமவிலும் இனவாதம் விதைத்ததையே மஹிந்த ராஜபக்ஷ அறுவடை செய்தார், போட்ட முதலும் இல்லாமல் வீடு திரும்பினார். ஆனால், இதே இனவாதத்தை விமர்சித்தே நல்லாட்சி அரசாங்கம் வெற்றிவாகை சூடியது. புதிய ஆட்சியில் கடும்போக்கு இயக்கங்களும் அதன் செயற்பாட்டாளர்களும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று சிறுபான்மையினர் உறுதியாக நம்பினர். இப்போது இனவாதத்தின் அதிதீவிரத் தன்மை சற்றுத் தணிந்து இருக்கின்றது என்றாலும், நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்றாலும், ஏதோ ஒரு அடிப்படையில் இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பதை யாரும் மூடிமறைக்க முடியாது. சட்ட ரீதியாக இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் அதில் பூரண வெற்றியடையவில்லை.

 

அப்படியென்றால், இவ்விடத்தில் மூன்று விதமான விளக்கமின்மைகள் எழுகின்றன. முதலாவது, சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட நாட்டில் காவியுடை தரித்தவர்களையும் இனவெறுப்பு செயற்பாட்டாளர்களையும் கைது செய்வதில் சட்டத்திற்கும் அரசாங்கத்திற்கும் தர்ம சங்கங்கடம் இருக்கின்றதா? இருக்கின்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இரண்டாவது, எடுத்த எடுப்பில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலம்பொருந்தியவையாக கடும்போக்கு இயக்கங்கள் வளர்ச்சியடைந்து இருக்கின்றனவா? மூன்றாவது, அல்லது பெருந்தேசியவாதம் பிச்சைக்காரனின் புண்ணைப்போல ஏதாவது ஒரு பிரச்சினையை நாட்டில் வைத்திருக்க எண்ணுகின்றதா? என்பதில் தெளிவுபெற வேண்டியிருக்கின்றது.

 

இலங்கையில் அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தீர்வுத் திட்டம் என்ற விடயத்திற்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்விடயம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பிரதான பேசுபொருளாக ஆகியிருந்தது. மேல்மட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி அடிமட்ட பொதுமகனும் வடக்கு–கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விடயத்தில் அதீத அக்கறை காட்டினர். இவ்விரு மாகாணங்களையும் இணைக்கவே கூடாது என்ற குரல் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து ஒலித்தது. அவ்வாறு இணைப்பதென்றால் குறைந்தபட்சம் தமக்கும் ஒரு உப தீர்வு அவசியம் என முஸ்லிம் சிவில் சமூகம் அடித்துக் கூறியது. இதற்கு மாறாக செயற்படும் அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

இவ்வாறான ஒரு நேரத்திலேயே இனவாத செயற்பாடுகளின் அடுத்த பருவகால (சீசன்) செயற்பாடுகள் வலுவடைந்தன என்பது கவனிப்பிற்குரியது. இது சர்வசாதாரணமாக, தற்செயலாக இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவ்வாறே இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையுமாகும். இருப்பினும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தன்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும், அண்மைக்காலங்களில் முஸ்லிம்களை கவலை கொள்ளச் செய்கின்ற பல சம்பவங்கள் ஒரு சங்கிலித் தொடராக இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் தற்செயலான நிகழ்வுகள் என்றே கருத முடியுமா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். ஏனெனில், இவ்வாறான நெருக்குவாரங்கள் வலுப்பெற்ற பிறகு முஸ்லிம்களின் கவனம் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அல்லாமல் வேறு விடயங்களின்பால் திரும்பியுள்ளமை கண்கூடு.

தொடர் சங்கிலி

கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் கடந்த இரு மாதங்களுக்குள் மீண்டும் உக்கிரமடைந்துள்ளதாக சொல்லலாம். முஸ்லிம்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த சமயத்திலே, அம்பாறை மாவட்டம் மாணிக்கமடு தமிழ் பிரதேசத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டது. சிலை விவகாரம் சூடுபிடித்ததும் பொதுவாக வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் பற்றி பேசுவது முஸ்லிம்களிடையே குறைந்து விட்டது. மாணிக்கமடு விவகாரம் போய்க் கொண்டிருந்த வேளையில் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி தமிழ் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தார். பின்னர் திருமலை மாவட்டத்தில் புத்தர் சிலை பற்றிய சர்ச்சை உருவானது.

 

சிலைவைப்பு பற்றியும் சில தேரர்களின் செயற்பாடு பற்றியும் முஸ்லிம்கள் கருத்தாடல்களை மேற்கொண்டிருந்த வேளையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துதல் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட கருத்து சூடுபிடித்தது. முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தினர். தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மறுதரப்பில் ஒரு சிறிய இனவாத செயற்பாட்டாளரும் கைதானார். பிறகு, இரண்டு வாரங்களாக அவ்விடயமே முஸ்லிம்களிடையே பேசப்பட்டது. இப்படியே பல நாட்கள் போய்க் கொண்;டிருக்கும் போதுதான், திடீரென ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதம் பற்றி நாட்டின் உயரிய சபையில் பேசப்படுகின்றது. கண்டியில் கடும்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய சில மணிநேரத்தில் புறகநர்பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீப்பற்றிக் கொள்கின்றது. அதற்குப் பிறகு பத்து பதினைந்து நாட்களாக இதுபற்றித்தான் முஸ்லிம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பு, தீர்வுத்திட்டம், வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரங்களை கிட்டத்தட்டே மறந்தே விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

 

இதற்கிடையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து முஸ்லிம்களிடையே ஏற்படுத்திய எதிர்வினைகளை தொடர்ந்து, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, நீதியமைச்சரின் கருத்தை மறுதலித்து பேசியிருந்தார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பேரவையின் நிலைப்பாடும் அதுவே என்றும் ராஜித குறிப்பிட்டிருந்தார். இது முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஒரு ஆறுதலான செய்தியே. என்றாலும், ஒரு அமைச்சர் அதுவும் நீதிக்குப் பொறுப்பானவர் ஆதாரமற்ற தகவல் ஒன்றை பாராளுமன்றத்தில் வெளியிடலாமா? அவ்வாறு தவறுதலாக இடம்பெற்றிருந்தால் அதற்கான மறுப்பும் விளக்கமளிப்பும் அச் சபையிலேயே முன்வைக்கப்படாதிருப்பது ஏன்? என்ற கேள்விகள் முஸ்லிம் சமூக விமர்சகர்களிடையே எழுந்துள்ளது. சரி, அதைவிடுவோம் என்று எடுத்துக் கொண்டாலும், அமைச்சர் ராஜிதவின் விளக்கம் தொடர்பாக மீண்டும் அமைச்சர் விஜயதாச கூறியிருக்கும் கருத்துக்கள், தான் தவறாக பேசியதை ஏற்றுக்கொள்ளும் பாங்கிலானவை எனக் கருத முடியாதுள்ளது. அதைவிடுத்து, அரசாங்கத்திற்குள்ளேயே இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஊடுருவல் தொடர்பில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் குழப்பப்படுகின்றனரா என்ற ஐயப்பாடுகளுக்கே இது இட்டுச் செல்கின்றது.

 

மறக்கப்பட்ட காலம்

இவ்வாறு, மாணிக்கமடு புத்தர்சிலை தொடக்கம் நீதியமைச்சரின் உரைக்குப் பின்னரான நிலைவரம் வரை தொடர்ச்சியாக பல சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் கவனம் சிதறடிக்கப்பட்டுள்ளது அல்லது வேறுவிடயங்களை நோக்கி திருப்பப்பட்டிருக்கின்றது என்றால் மிகையில்லை. இந்த ஒன்றரை மாதங்களாக முஸ்லிம் அரசியல், சமூக தளங்களில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்தாடல்கள் வெகுவாக குறைந்து, மேற்குறிப்பிட்ட இதர விவகாரங்களின் மீதான கரிசனை அதிகரித்திருப்பதை காண முடிகின்றது. இது தற்செயலாக நடந்திருந்தால் நாம் கலவரமடைய வேண்டிய அவசியமில்லை. நாட்டில் நடக்கின்ற சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் இவ்வாறு முஸ்லிம்களின் கவனத்தை திருப்ப வேண்டுமென்று உண்மையிலேயே நினைத்திருந்தார்களா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆனால், இச்சம்பவங்களால் நமது கவனம் வேறு தற்காலிக பிரச்சினைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.

 

நாட்டு நிலைமை இவ்வாறிருக்க மறுபுறத்தில், உத்தேச அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அன்றாடம் நிகழ்கின்ற இனத்துவ நெருக்குவாரங்கள், மத மேலாதிக்கம் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அரசியலமைப்பு பேரவையின் நீண்டகால நோக்கிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. முஸ்லிம் மக்கள் உத்தேச அரசியலமைப்பு, அதன்வழியான தீர்வுத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு விடயங்கள் பற்றிப் பேசுவதை குறைத்து, வேறு விடயங்களில் கவனத்தை குவிவடையச் செய்திருக்கின்ற இக் காலப்பகுதியில், முஸ்லிம்களுக்கு வெளியிலுள்ள தரப்பினர் திட்டமிட்டபடி அரசியலமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் மிகக் கவனமாக ஈடுபட்டுள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது.

 

அந்த வகையில் அரசியமைப்பு பேரவையின் 6 வழிப்படுத்தல் குழுக்களும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றன. அடிப்படை உரிமைகள் பற்றிய உப குழு, நீதித்துறை பற்றிய உப குழு, நிதி பற்றிய உப குழு, பகிரங்க சேவை மறுசீரமைப்பு பற்றிய உப குழு, மத்திய, சுற்றயல் பற்றிய உப குழு, தேசிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு ஆகியவை அறிக்கைகளை முன்வைத்துள்ளன. இவ்வறிக்கைகள் தேசிய ரீதியான கண்ணோட்டத்துடனேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய உப குழுவுக்கு 9 தரப்பினர் எழுத்துமூல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் கட்சியின் பெயரையாவது காண முடியவில்லை. முஸ்லிம்களாகிய நாம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் எந்தளவுக்கு அக்கறையுடன் இருக்கின்றோம் என்பதையும், முஸ்லிம் அரசியல்வவாதிகள் மற்றும் மக்களின் கவனம் எவ்விடயத்தில் குவிந்திருக்கின்றது என்பதையும் அறிந்துகொள்ள இது ஒரு பதச்சோறாக கருதப்படலாம்.
எனவே, முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ் விடயத்தை சீரியஸாக சிந்திக்க வேண்டியுள்ளது. இனவாத நெருக்குதல்கள், அரசாங்கத்தின் பாரபட்சங்கள், இனத்துவ அடையாளங்கள், மத உரிமைகள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. மாறாக, அவ்விடயங்களில் கவனம் செலுத்துகின்ற சமகாலத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் தீர்வுத்திட்டம் ஆகிய தலையாய முக்கியத்துவமிக்க விடயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

 

முஸ்லிம்களைப் போலேயே அவர்களுடைய அரசியல்வாதிகளும் வேறு விடயங்களின்பால் அதீத கவனம் செலுத்துவதாக தோன்றுகின்றது. அரசியல் கட்சிகள் அரசியலுக்கு அப்பாலான விழாக்கள் மற்றும் மாநாடுகளில் கவனம் செலுத்துவது நல்ல விடயமே. என்றாலும் சமகாலத்தில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்குகளையும், தேர்தல் முறை தொடர்பான விளக்கமளிப்புக்களையும், தீர்வுத் திட்டம் பற்றிய கருத்தாடல்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஊர் வாரியாக மக்களை அறிவூட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பது, மக்களின் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் விடப்பட்ட பாரிய தவறாக இருக்கின்றது.
முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் விளையாட்டுப் பிள்ளைகளாக எந்நாளும் இருக்க முடியாது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 04.12.2016)

nifras