ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் இந்த ஆண்டுக்கான ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.
ரஷியா, சீனா, துருக்கி உள்பட ‘சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதரநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கும் இந்த இரண்டுநாள் மாநாட்டின் முதல்நாளான நேற்று மேற்கண்ட நாடுகளில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இன்றுகாலை தொடங்கிய இரண்டாம்நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் அரசின் சார்பில் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த மாநாட்டின்போது, ஆப்கானிஸ்தான் மீள்கட்டமைப்புக்காக பாகிஸ்தான் அளிக்க முன்வந்த 50 கோடி டாலர் நிதியுதவியை வேண்டாம் என்றுகூறி, நிராகரித்துவிட்ட ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, தீவிரவாதத்தை ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் எவ்வளவு பணத்தை அளித்தாலும் எங்களுக்கு அது உதவிகரமாக இருக்காது.
அந்தப் பணத்தை வைத்து முதலில் உங்கள் நாட்டில் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஒழியுங்கள் என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில், எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய வெளிப்படையாக அளிக்க முன்வந்த 100 கோடி டாலர்களை மனமார ஏற்றுக்கொள்வதாகவும் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.