ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குத் தேவையான சட்டதிட்டங்களை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்

இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 90க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அநீதி இழைக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
hisbullah
அத்துடன், மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு – நிவாரணம் வழங்கவும் நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 
அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 
ஊடகச் சுதந்திரம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. நல்லாட்சி அரசு தகவல்  அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதி  வழங்கியிருந்தது. அதற்கமைய விரைவில் அந்த சட்டமூலம் அமுல்படுத்தவும் அது நடவடிக்கை எடுத்துள்ளது. 
அத்துடன், ஊடகவியலாளர்களுக்கு தொழில் ரீதியான சலுகைகள் – வசதிகளை செய்து கொடுப்பதற்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகின்றன. ஊடகங்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாகவும் – தனித்துவமாகவும் மேற்கொள்வதற்கு அரசு இவ்வாறான வாய்ப்;புக்களையும் – வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றது. எனினும், சிலர் இந்த அரசு ஊடகங்களை அடக்குவதாக குற்றம்சாட்டுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது. 
அதேவேளை, கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகின. சிங்கள ஊடக நிறுவனங்களைப் பார்க்கிலும் தமிழ் ஊடக நிறுவனங்கள் கடந்த காலங்களில் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகின. ஆனால், அவ்வாறு தாக்குதல்களுக்கு இலக்கான ஊடக நிறுவனங்களுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கோ எந்தவித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. 
 
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகை அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது. இதனால் அது பெரும் இழப்பையும் சந்தித்து. அங்கு பணியாற்றிய ஏராளமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் – படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவ்வாறே கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிய தமிழ் ஊடகங்கள் மீதும் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் செய்தி சேகரிப்பாளர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதுடன், அதில் சிலர் கொலை செய்யப்பட்டும் இருந்தனர். 
இவ்வாறு, லசந்த விக்ரமதுங்க, சின்னதம்பி சிவமஹாராஜா, மொஹமட் ரஷ்மி, லக்மால் டி சில்வா, சிவமகராஜ், ச.பாஸ்கரன், சாதவன் திலகேசன், செல்வராஜ் ராஜுவரமன், பீ.தேவகுமார், சுபாஷ் சந்திரபோஸ், சுஹரதாராஜன், பாஸ்தியன் ஜோர்ஜ், இராஜரட்ணம் ரஞ்ஜித் போன்ற 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 10 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள்.
ஊடகவியலாளர் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அத்துடன் பல சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கடத்தப்பட்டும், இன்னும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்தனர். 
இவ்வாறு,ஊடகப்பிணியை மேற்கொண்ட பல ஊடகவியலாளர்கள் பலகோணங்களில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தற்போதுள்ள ஊடகவியலாளர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குத் தேவையான சட்டதிட்டங்களை விரைவில் அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.