நாடு முழுவதும் ரூ.8.11 லட்சம் கோடி பணம் வைப்பிடப்பட்டுள்ளது : ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

black-money-generic_650x400_81435806469

கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக நவம்பர் 8 ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பழைய நோட்டுகளை டிசம்பர் 30 ம் தேதிக்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் வங்கிகளில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை செபாசிட் செய்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட மூன்று வாரமாகியும் இன்னும் சில்லறைத் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால் வங்கிகளின் வாசல்களில் பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் திங்கள்கிழமை வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்துள்ளனர்.

அதேபோல், ரூ.2.16 லட்சம் கோடி பணம் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.33,948 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுளை மாற்றம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.