புதிய கட்சியின் தலைவர் யார்? கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

mahinda-rajapaksa4-600

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விசேட யோசனை மினுவாங்கொடையில் இன்று(27) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உடுகம்பொல ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மினுவாங்கொடை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர், மினுவாங்கொடை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் குமார அரங்கல்ல, முன்னாள் ஜனாதிபதி புதிய கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் ஈடுபடுவது அர்த்தமற்றது எனவும் அரங்கல்ல கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் புதிய கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிடுவார்கள் இதனால், இந்த கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச மக்களுடன் இருக்கும் தலைவர் என்பதால், மக்களின் இந்த கோரிக்கையை அவர் நிராகரிக்க மாட்டார் என தான் நம்புவதாகவும் அரங்கல்ல குறிப்பிட்டுள்ளார்.