ஆட்சியில் ‘மாற்றத்தை’ ஏற்படுத்துவதாகச் சொல்லி நாம் வாளிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம்

மாற்றம் வேண்டும்
ஒரு வீட்டிலுள்ள கிணற்றில் பூனையொன்று விழுந்து இறந்து விட்டது. அதனால் வீட்டுக்காரருக்கு பெரும் அசூசையாகிப் போனது. உடனே தான்சார்ந்த மதப் போதகரிடம் போய் இவ்விடயத்தைச் சொன்னார். அவர் ’50 வாளி தண்ணீரை இறைக்குமாறு’ அறிவுரை கூறினார். அவ்வாறே வீட்டுக்காரரும் செய்தார். ஆனால் நாற்றம் போகவில்லை. திரும்பவும் போய் சொன்னார். அப்போது ‘100 வாளி தண்ணீரை இறைத்து கொஞ்சம் குளோரின் போடுங்கள்’ என்றார் போதகர். ஆனால் அப்படிச் செய்தும் நாற்றம் போகவில்லை. பிறகு நீர் இறைக்கும் வாளியை மாற்றிப் பார்த்தார்கள். எதுவுமே சரிவரவில்லை. வீட்டுக்காரர் கடுங்கோபத்துடன் மார்க்க போதகரிடம் போய், முழு விபரங்களையும் மீண்டும் சொன்னார். அப்போது, ஏதோ சிந்தனை வந்தவரான போதகர் வீட்டுக் காரரிடம் கேட்டார், ‘அது சரி, பூனையை வெளியில் எடுத்து விட்டீர்களா?’ என்று.
இப்படித்தான் இலங்கை அரசியலின் நிகழ்கால நிதர்சனமும் இருந்;து கொண்டிருக்கின்றது.

 

ஆட்சியில் ‘மாற்றத்தை’ ஏற்படுத்துவதாகச் சொல்லி நாம் வாளிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் அல்லது நீரை மட்டும் இறைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்குக் காரணமான பூனை இன்னும் அப்படியே உள்ளே கிடப்பதால் அதாவது இன ரீதியாக சிந்திக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படாமையால் தேசிய நீரோட்டம் தூய்மையானதாக மாற்றம் பெறவில்லை.

 
மாறாத காட்சி
மாற்றம் ஒன்று தேவை என்ற புரட்சிகரமான கோசத்தை சந்தைப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. ஆனால் ஆட்சிமாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போன்ற நிலைமைகளே தொடர்கின்றன. இது முஸ்லிம்களிடையே கடுமையான மனக்கிலேசங்களை தோற்றுவித்துள்ளது. தமிழர்களும் இவ்வாறான ஒரு மனத்தாங்கலுக்கு உட்பட்டிருக்கின்றனர். உண்மையாகவே இவ்விடயம், சகோதர இனவாஞ்சையுள்ள சிங்கள மக்களுக்கும் ஒரு நெருடலாகவே இருக்கின்றது. ஆனால்…. யார் என்ன நினைத்தாலும் கடும்போக்கு சக்திகள் தங்களுடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடனேயே இருக்கின்றன.

 
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியும் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுமே இலங்கையில் நவீனகால இனவாதத்துக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள் என்ற நிலைப்பாட்டின் பிரகாரம் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியையே மாற்றியமைத்தனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலாக முக்கிய பொறுப்புக்களில் இருந்த பலர் மாற்றப்பட்டனர். ஆனால், ஒரு அரசாங்கம் என்பதும் அதன் ஆட்சி நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்பதும் இவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. அது, அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர்கள், அமைப்புக்கள், வெளிநாட்டு சக்திகள், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், சாதாரண அரசியல்வாதிகள், மக்கள் என ஏகப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய ஒரு பெரிய கட்டமைப்பாகும். அந்த வகையில் இலங்கையில், அரச இயந்திரத்தின் அடிப்படைகள் மாற்றப்பட்டுள்ளன.

 

ஆனால், மற்றைய எல்லா உதிரிப் பாகங்களும் பழயவையாகவே இருக்கின்றன. நல்லாட்சி என்ற சுலோகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இனவாதிகளும், சிறுபான்மை மக்களை ஒடுக்க வேண்டுமென நினைப்பவர்களும், பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சிறுபான்மையின செயற்பாட்டாளர்களும் இன்னும் தம்மை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. அதுவே இன்றைய அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம் எனலாம்.
காலகாலமாக, ஆட்சி மாற்றத்தை விரும்பும் சக்திகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி அதனை கனகச்சிதமாக செய்து வந்திருக்கின்றன. 2001ஆம் ஆண்டு மாவனல்லை கலவரத்தின் பின்னர் சந்திரிக்காவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், 2013 அளுத்கம கலவரத்திற்கு பிறகு மஹிந்த வீழ்த்தப்பட்டதும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது. அந்த தொடரில் இப்போதிருக்கின்ற அரசாங்கத்தை சிக்கலில் மாட்டுவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடே இப்போது ஏற்பட்டிருக்கின்ற இன முரண்நிலைகள் என்று பரவலாக அனுமானிக்கப்படுகின்றது. இதில் உண்மை இல்லாமலுமில்லை.

 
தளம்பலை ஏற்படுத்தல்
தமிழர்களிடையே சிற்சில உள்ளக கருத்து முரண்கள் இருந்தாலும் அரசியல் ரீதியாகவோ வேறு அடிப்படையிலோ அவர்களை குழப்ப முடியாத அளவுக்கு ஓரளவுக்கு பக்குவப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம்களை எப்போதும் தளம்பல் நிலையில் வைத்திருக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் அதைச் செய்யலாம். இதை மேற்குறிப்பிட்ட சக்திகள் அறிந்து வைத்திருக்கின்றன. அந்த வகையில் நோக்கினால், மேற்கத்தேயத்திற்கு சார்புப் போக்குடையவர் என்று குறிப்பிட முடியாத தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவை சில வெளிநாட்டு சக்திகளுக்கு இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். மைத்திரிக்கு வாக்களித்தவர்களும், மிக இலகுவாக தளம்பல் நிலைக்கு கொண்டு வரக்கூடியவர்களுமாக இருக்கின்ற முஸ்லிம்களை தூண்டிவிடுவதன் மூலம் அந்த அதிர்வுகளை உண்டுபண்ணி, ஆட்சியின் ஸ்திரத்தன்மையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த தரப்புக்கள் முயற்சிக்கின்றார்களோ என்ற வலுவான சந்தேகத்தை அவர்கள் எழுப்புகின்றனர்.

 
எது எப்படி இருந்தாலும், அண்மைக்கால நிலைவரங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பதே சிறுபான்மையினருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமன்றி சில ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகார தரப்பினரினது செயற்பாடுகள் மிக மோசமான முன்னுதாரணங்களாக தெரிகின்றன. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இனவாத நிலைமைகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பது போல அமைகின்றன.

 
இந்தப் பின்னணியில், எல்லா இனங்களையும் சமத்துவமாக கருதி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பாரிய சிக்கல்நிலை தோன்றியிருக்கின்றது. இதற்குக் காரணம், அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஆட்சியாளர்களை மாற்றிவிட்டோம். ஆனால் ஆட்சிக் கட்டமைப்பின் அடிமட்டம் வரையுள்ள மற்றைய தரப்பினரில் பலர் இன்னும் பழைய குட்டையில் ஊறியவர்களாகவே இருக்கின்றனர். அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே, இந்த சதிகளை எல்லாம் முறியடிக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன.

 
2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது புதிய ஜனாதிபதியும் பிரதமரும் நல்லதொரு மாற்றத்திற்கான சிந்தனையுடன் நல்லாட்சியை நிறுவினர் என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால், இனவாத போக்குடைய, முன்னைய அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்த பலருக்கு நல்லாட்சியிலும் பதவிகளும் அதிகாரங்களும் வழங்க வேண்டியேற்பட்டது. முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அந்த ஆட்சியின் விசுவாசிகள் என பலதரப்பட்டோர் அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் பணியில் இருக்கலாம். ஆட்சி மாறியதால் இவர்களது மனநிலையும் மாறும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படியிருக்கையில், நல்ல சிந்தனைகளை மக்கள் மயப்படுத்துவதும், இலங்கையை இனவாதம் அற்ற நாடாக மாற்றுவதும் குறுகிய காலத்திற்குள் நடந்துவிடக் கூடிய அபூர்வ மாற்றம் அல்ல.

 
சீசனுக்கான கோஷம்
சிங்கள கடும்போக்கு சக்திகளின் சிந்தனை இன்னும் மாற்றமடையவில்லை. இச் சக்திகள் காலத்துக்கு காலம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இலக்குவைத்து அடக்குமுறைகளை முடுக்கிவிடுகி;ன்றன. இவ்வாறான அடக்குமுறையின் வெளிப்பாடே ஆயுத மோதலாக வெடித்து, முப்பது வருடம் நீடித்தது. அதேபோல் அதற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கலவரங்களும் கருத்தியல் யுத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 
முஸ்லிம்களுக்குள் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன என்றும், முஸ்லிம்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் கோஷமெழுப்புவது புதிதல்ல. மார்க்கத்தை கடைப்பிடிக்குமாறு முஸ்லிம்களை அழைக்கும் பணியில் ஈடுபடுகின்றவர்களை சில கடும்போக்காளர்கள் 25 வருடங்களுக்கு முன்னரே அடிப்படைவாதிகள் என்று கருதினர்;. 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜிகாத் அமைப்பு இருப்பதாக கதை பரப்பினார்கள். இப்போது மீண்டும் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்கு ஒருமுறைதான் இவ்வாறான கோஷங்களை பேரினவாத சக்திகள் தூக்கிப் பிடிக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் அதைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அது தேவையாக இருப்பதில்லை. ஆனால், அப்படியொரு தேவை இன்று வந்திருக்கின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

 

Muslims
ஆனால், இதற்கான ரிஷிமூலங்கள், இதன் பின்னாலுள்ள சதித்திட்டங்கள் பற்றியெல்லாம் அறிந்திருக்கக் கூடிய அரசாங்கம் இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கை காட்டுவதும், சில போதுகளில் இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதும் முஸ்லிம்களுக்கு மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்கள பெரும்பான்மை நாடொன்றில் துறவிகளை பிடித்து சிறையில் அடைப்பதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன. என்றாலும், அதன் தீவிரத் தன்மையையாவது வெற்றிகரமாக கட்டுப்படுத்தவில்லை என்பதே முஸ்லிம்களின் கவலையாகும்.

 
இதேபோன்று, அண்மைக்காலத்தில் அரசாங்கம் பலஸ்தீனத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் தொடர்பான யுனெஸ்கோ வாக்களிப்பில் இலங்கை எடுத்த நிலைப்பாடு, அதற்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பாராளுமன்ற உரை என்பன முஸ்லிம்களை சந்தோசப்படுத்தும் நடவடிக்கைகளாக அமையவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினரின் மனநிலை இன்னும் மாறவில்லையோ என்ற நியாயமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது.

 
நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகையி;ல், சட்டம் எல்லோருக்கும் சமமாக பிரயோகிக்கப்படும் என்று மிகவும் காத்திரமான கருத்தை முன்வைத்தார். அத்துடன் இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் வரை ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். இங்கு பல முஸ்லிம் அமைப்புக்களின் பெயரைக் குறிப்பிட்டு உரையாற்றிய அமைச்சர், ஒரு கடும்போக்கு சிங்கள அமைப்பின் பெயரையும் சபையில் குறிப்பிடவில்லை. இப்பேச்சு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ‘நான் மக்களை அறிவூட்டுவதற்காகவே அவ்வாறு கூறினேன்’ என்று அமைச்சர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கின்றார். அத்துடன் எல்லா தரப்பினருடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளார். ஆயினும், நாட்டின் உயரிய சபையில் சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முடிச்சுப்போடும் விதத்தில் நீதியமைச்சரே பேசியிருக்கின்றமை பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. நல்லாட்சியிலும் அரசியல்வாதிகளின் மனோநிலை மாற்றமடையவில்லையா என்ற சந்தேகத்தை இவ்வுரை ஏற்படுத்திற்று.
எவ்வாறிருப்பினும், இலங்கையர் எவரும் ஐ.எஸ். இயக்கத்தில் இல்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பேரவையின் குரலாக அமைச்சர் வெளியிட்டுள்ள இக்கருத்து முஸ்லிம்களின் மனக் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்துள்ளதுடன், தேவையற்ற குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது எனலாம்.

 
அடுத்தடுத்த நிகழ்வுகள்
இதுஇவ்வாறிருக்க, கண்டியில் ஒன்றுகூடிய பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அதேநாள் இரவு பெபிலியானவில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் தீப்பிடித்தது. இத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் கூட, அந்த ஓரிரு தினங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை கோர்வையாக நோக்கினால், எல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. இப்படியாக அதிகமான இனவெறுப்பு சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கின்றது.

 
இதற்குக் காரணம், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் அரச இயந்திரத்தின் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மனோநிலையிலும் அதிகார வர்க்கம், சாதாரண உத்தியோகத்தர்கள், மற்றும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற கடைநிலை உத்தியோகத்தர்களின் மனோநிலையிலும் அவர்களுக்கு கட்டளை வழங்கும் மேலதிகாரிகளின் மனதிலும் மாற்றம் ஏற்படாமை என்றால் மிகையில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றப்பட்டு விட்டார்கள். ஆனால், கீழுள்ளவர்களில் கணிசமானோர் இன்னும் இனங்களை பிரித்து நோக்குகின்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடகவே இதை கணிக்க முடிகின்றது.

 
அரசாங்க கட்டமைப்பில் மட்டுமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும் போதியளவுக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக, சிங்கள மக்களில் ஒரு குறிப்ப்pட்டளவானோரே கடும்போக்கு இயக்கங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர் என்பதை, முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கணிசமான பௌத்த பிக்குகள் வீதிக்கு இறங்கி சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். சாமான்ய சிங்கள மக்கள் முஸ்லிம்களின் நியாயங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனை கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட வேண்டும். மிக முக்கியமாக, நமது சமூகம், இனம் என்ற அடிப்படைகளில் சிந்திப்பது போலவே இலங்கை பிரஜை என்ற தேசிய உணர்வையும் எல்லா இனங்களும் வளர்க்க வேண்டியுள்ளது.

 
அதேபோன்று நீதியமைச்சரின் கருத்தை மறுத்துரைத்துள்ள அரசாங்கம், இலங்கையில் தீவிரவாதம் இருந்தால் அதை இல்லாதொழிப்பதற்கு நியாயமான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். அதைவிடுத்து, அப்பாவி முஸ்லிம்களை ஆயுத குழுக்களுடன் இணைத்துப் பேசவும் ஏனைய இனங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கக் கூடாது. அதேபோல் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை செயலில் காட்ட வேண்டும்.
அரசாங்கம் என்னதான் கொள்கை வகுத்தாலும் எல்லா மட்டங்களிலும் மனநிலை மாற்றம் ஏற்படாத வரை இனவாதம் அற்ற சூழலையும் சட்டத்தின் நடுநிலைப்பார்வையையும் நிலைநாட்டுவது சிரமமாகவே இருக்கும். ஜனாதிபதியும், பிரதமரும் வந்து ஒவ்வொருவரது நடவடிக்கையையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக, அவரவரின் மனங்களில் இருந்து இன, மத ரீதியான பாகுபாடுகள் மற்றும் இனவாத கசடுகள் களையப்பட வேண்டும்.

 
முதலில், தேசிய அரசியல் மற்றும் சமூக நீரோட்டத்தில் கிடக்கின்ற இந்த மனநிலையை, அதாவது ‘பூனையை’ வெளியில் எடுக்க வேண்டியுள்ளது.
-ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி 27.11.2016)