நாட்டில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச் செய்து விட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசாங்கம் இழைத்த தவறுகளை தற்போது உணர்ந்துவிட்ட நிலையில் தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சி யான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பு இராஜகிரியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நடை பெற்றது.
இதன்போது கட்சியின் உருவாக்கத்திற்கான நோக்கம், எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டார்.அவர் தனதுரையில்,
இன்று பாதுகாப்பு தொடர்பாக அனைவரிடையேயும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அச்சநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அன்று முஸ்லிம் மக்கள் வடக்கிற்குச் செல்லமுடியாத நிலையே ஏற்படுத்தப்பட்டது. 48 மணித்தியாலங்களிற்குள் வெறும் இரண்டு பொலித்தீன் பைகளில் தங்களது பொரு ட்களை எடுத்துக்கொண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அன்று வடக்கிலிருந்து வெளியேறினர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மகிந்த ராஜபக்ஷவே முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எனினும் மீண்டும் அந்த அபாயநிலை உரு வாகியுள்ளது. இவ்வாறான அறிவிப்புகள் இன்றும் தொடர்வதால் சிங்கள மக்கள் வடக்கில் வாழ முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயும் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே இந்த அச்சநிலையை நீக்குவதே எமது கட்சியின் பிரதான இலக்காகும்.
பெரும்பான்மையினரான சிங்கள மக்களிடையே அச்ச நிலையை ஏற்படுத்திவிட்டு தமிழ் மக்களின் அச்சநிலையை நீக்கிவிட முடியாது. அதனை அனைத்துத் தரப்பும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே முதலில் சிங்கள மக்களின் அச்சநிலையை நீக்கி விட்டு தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை நடத்த தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக எதையேனும் அர்ப்பணிப்பதற்கு எமது கட்சி தயாராக உள்ளது.
எமது ஆட்சியில் இழைக்கப்பட்ட தவறுகளினால்தான் எம்மை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள். மக்களின் ஆணைக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம்.
எனவே தவறுகளை சரிப்படுத்தி பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் எமது தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வதற்கு தயார் என்பதை மகிந்த ராஜபக்சவும் கூறியிருந்தார்.
நாங்களும் அதனையே கூறுகின்றோம். எனவே எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியில் தானும் இணைந்து கொண்டதாக இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பொது மக்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்ததோடு, கட்சி உறுப்புரிமைக்கான விண்ணப்பப் படிவத்தையும் ஊடகங்களின் முன்பாக காண்பித்திருந்தார்.