முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுக்கு தவறான தகவல்களை வழங்கி, அவரை தோல்விக்கு இழுத்து சென்றவர்கள் இன்னமும் அவருடனே உள்ளதாக ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு ஷிரந்தி ராஜபக்ச எவ்வளவு முயற்சித்த போதிலும் இறுதியில் அவர் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற சிறிய கட்சி தலைவர்களை உட்பட விமர்சிக்க நேரிட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவின் அரசியல் தீர்மானங்களின் போது என்னிடம் எதனையும் எனது கணவர் வினவியதில்லை. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் சோதிடர்களின் கருத்துக்களையே அவர் பெற்றுக் கொண்டார்.
இறுதியில் அவர்கள் கூறியதனை கேட்டு அவர் அழிந்து விட்டார். இன்னமும் அவர்கள் மஹிந்தவுடனே செயற்படுகின்றனர். என்னிடம் தீர்மானங்கள் குறித்து மஹிந்த வினவியிருக்கலாம் என ஷிரந்தி தெரிவித்துள்ளார்.
என்னிடம் வினவியிருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல அனுமதித்திருக்க மாட்டேன். கிரக நிலை, நேரம் மற்றும் மக்களின் கருத்துக்கள் அனைத்தையும் நான் பார்ப்பேன். இந்த முறை என்னால் அதனை செய்ய முடியாமல் போய்விட்டது. எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
விமல், உதய கம்மன்பில போன்றோர் தான் அவர் அருகில் இருந்தார்கள். அந்த காலங்களில் அவர்கள் எங்கள் வீட்டிலேயே இருந்தார். சுதந்திர கட்சி உறுப்பினர்களை விடவும் அவர்கள் தான் அருகில் செயற்பட்டார்கள். இறுதியில் நாங்கள் அழிந்து விட்டோம் என ஷிரந்தி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.