இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.
இதற்கான உரிமையை தமிழ் மக்களுக்கு பாராளுமன்றம் வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றில் நேற்று கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தினால் உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த சபையில் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த அரசாங்கத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்றம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கும், நியமங்களுக்கும் அமைவாக நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.