அரசியல் ஆதாயத்திற்காக மோடி தனது 97வயது தாயாரை வரிசையில் நிற்க வைத்ததாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார் காந்திநகரில் தன் கிராமத்தில் உள்ள வங்கிக்கிளைக்கு வந்து ரூ.500 நோட்டுகளை மாற்றிச் சென்றார்.

ரைசான் கிராமத்தில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிக்கு உறவினர்களுடன் வந்தார் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இவர் சக்கர நாற்காலிவயப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவினர்களுடன் வந்த ஹீராபென் மோடி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து தனது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து ரூ.4,500 மாற்றம் செய்து கொண்டார். புதிய ரூ.2000 தாள்களை பெற்ற ஹீராபென் மோடி அதனை செய்தியாளர்களிடம் காண்பித்தார். 

இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி தனது தாயாரை வரிசையில் நிற்க வைத்ததாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில், அரசியல் ஆதாயத்திற்காக தன்னுடைய தாயை வரிசையில் நிற்க வைத்தது பிரதமருக்கு தகுந்த நடவடிக்கை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.