1970களில் இருந்து 60 சதவீதமான முதுகெலும்பு கொண்ட விலங்குகள் அழிக்கப்பட்டதற்கு மனித நடவடிக்கை தான் காரணம் எனச் சுற்றுச்சூழல் அமைப்பான உலக வனஉயிரின நிதியம் மற்றும் லண்டன் உயிரியல் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘தி லிவிங் பிளானட் ரிப்போர்ட்’ (The Living Planet Report) என்ற அறிக்கை, இந்தப் போக்கு தொடர்ந்தால், இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்கும் பல்லுயிர் விரிவாக்கத் தன்மை முற்றிலும் அழிந்துவிடும் என்று கூறுகிறது.
ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 4,000 பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், நீர், நில வாழ்வன மற்றும் ஊர்வன ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.
கடந்த அரை நூற்றாண்டில் இரட்டிப்பாகப் பெருகியுள்ள மனிதர்கள் , தங்களது பசிக்காக, பூமி கிரகத்தில் உள்ள தன்னுடன் வாழும் மற்ற உயிரினங்களை உண்பது, அவற்றை விஷமிட்டு கொல்வது எனமுற்றிலுமாக அழித்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.