ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கெளரவம் :டிரம்ப்

அதிகார மாற்றம் தொடர்பாக, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கெளரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

_92388787_trump-obama1

இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒபாமா, சிறப்பான, விரிவான பேச்சுவார்த்தை தனக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

இருவரும் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெற்றி பெறக்கூடிய வகையில், அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது முக்கியப் பணி என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைக், பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாகவும், தனது குழுவுடன் இணைந்து அமெரி்க்கா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து செயல்பட டிரம்ப் ஆர்வமுடன் இருப்பது குறித்து தான் ஊக்கமடைந்திருப்பதாக ஒபாமா குறிப்பிட்டார்.

_92388790_8e674432-b2c9-47d0-8f48-2c24e4e7aa41

எதிர்காலத்தில், ஒபாமாவுடன் ஆலோசனை நடத்துவதை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

“இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நடந்தாலும், என்னைப் பொருத்தவரை இன்னும் நீண்ட நேரம் நடந்திருக்கலாம்” என்றார் டிரம்ப்.

“பல சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்தோம். சில அருமையானவை. சில கடினமானவை ” என்றார்.

ஒபாமாவைச் சந்திப்பதற்காக, தனது சொந்த விமானத்தில் நியுயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார் டிரம்ப். அவருடன், மனைவி மெலானியாவும் உடன் சென்றார். 

அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமைவைச் சந்தித்தார் மெலானியா.