தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவிப்பு !

தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதையும், அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளதையும் மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்தது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

தமிழக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீத்தேன் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 2013-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

images

டெல்லியில் இன்று இதுபற்றி பேசிய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதுமட்டுமின்றி ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மீத்தேன், ஷேல் திட்டங்களை ரத்து செய்ததாகக் கூறிய பிரதான் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசின் ஆதரவை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.