அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி வாகை சூடியுள்ள டிரம்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்கிறார்.
ஜப்பான் கேபினட் செயலாளர் யோஷிகிடெ சுகா இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “அபேவும் டிரம்பும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது ஜப்பான் – அமெரிக்கா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உறுதி செய்தனர்.
அவர்களது சந்திப்பு இருதரப்பினருக்கு இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதற்கு நல்ல தொடக்கம். டிரம்ப், அபே இடையேயான சந்திப்பு வருகின்ற நவம்பர் 17-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.