இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும்:பங்களாதேஷ் அமைச்சர்

 

சுஐப் எம்.காசிம்    

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது அடுத்த வருடம் மார்ச் மாதமளவிலேயே இரு நாடுகளுக்கும் யதார்த்தமாகும் என்று பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் டொபைல் அஹமத் தெரிவித்தார். 

unnamed-3

தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் (SAFTA), ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு (APTA), பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் முயற்சியான்மை (BIM – STEC) ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கும் இரண்டு நாடுகளும், கடல் வழியாக வியாபாரத்தை மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்டுள்ளதால், கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தித் தனது வர்த்தகத்தை விஸ்தரிப்பதற்கு தமது நாடு முடிவு செய்துள்ளதாகவும் பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். 

“கொழும்புக்கான தனது விஜயம் வெற்றிகரமாகப் பயனளித்துள்ளது. இலங்கையின் உயர்மட்டத் தலைவர்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் டாக்காவுக்கு விஜயம் செய்த பின்னர், இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக உடன்பாடு யதார்த்த நிலையை அடையும்” என்றும் கொழும்பு, சினமன் லேக் ஹோட்டலில் நேற்று மாலை (09/11/2016 ) இரண்டு நாடுகளுக்குமிடையிலான இணைந்த பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வின் பின்னர் உரையாற்றியபோது பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சு மட்டத்திலான இந்த அமர்வுக்கு அமைச்சர்களான டொபைல் அஹமத் மற்றும் றிசாத் பதியுதீன் தலைமை தாங்கினர். முதலாவது அமைச்சு மட்டத்திலான நிகழ்வு 2012 ஆம் ஆண்டு டாக்காவில் இடம்பெற்றது. 

“இரண்டு நாடுகளும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. சுமுகபூர்வமான கலந்துரையாடல்களின் பின்னர், இரண்டு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். நான் இலங்கையில் தங்கியிருந்தபோது இங்குள்ள மூன்று அமைச்சர்களை சந்தித்தேன்” என்றும் அமைச்சர் அஹமத் மேலும் தெரிவித்தார்.

unnamed-1

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றியபோது கூறியதாவது,

கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவானது முக்கியமான சில விவகாரங்களில் முடிவு கண்டுள்ளது. இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகள், இருதரப்பு முதலீட்டு ஒத்துழைப்பு, இரண்டு நாடுகளுக்குமிடையிலான தேசிய தர நிறுவனங்களின் புரிந்துணர்வு உடன்பாடுகள், வர்த்தக சட்ட வடிவமைப்பு மற்றும் பொருளாதாரத்தை விஸ்தரித்தல், இரண்டு நாடுகளுக்குமிடையில் விவசாயம் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு ஆகியவை தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

பங்களாதேஷ் வர்த்தக சம்மேளனம், ஆடைத் தொழிற்சாலை மற்றும்  கம்பனி முக்கியஸ்தர்களும், தங்களது நாட்டுத் தூதுக்குழுவில் அடங்கியிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. 

அரசின் முன்னேற்றகரமான திட்டங்களிலும், உலகிலேயே முதல்தரம் வாய்ந்த ஆடைத் தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்யுமாறு, இந்தக் கம்பனிகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.