இந்த நாட்டில் புத்தர் சிலை வைக்க தடை செய்ய பேசுவதாக இருந்தால் அது தவறானது நாம் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். ஆனால் இந்த புத்தர் சிலையை அகற்ற கோரினால் நான் அதற்கு உடன்படமாட்டேன் இந்த பதவியை துறந்து விட்டு வீட்டுக்கு போவேன் , புத்தர் சிலை எங்கு வைக்கிறார்கள் என்பது எனக்கு தேவையில்லாத விடயம் ஆனால் அதனை அகற்ற என்னால் உடன்பட முடியாது என அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அம்பாறை கச்சேரியில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற ரீதியில் கலந்து கொண்டு இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தயா கமகே தெரிவித்துள்ளார் அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் ,
இலங்கையில் உள்ள விகாரைகளில் ஒரு நாளைக்கு நூறு தொடக்கம் இருநூறு புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இலங்கையின் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சர்வ மதகுருமார்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் புராதன வரலாற்றை பார்த்தால் திகவாபி விகாரை கல்வெட்டில் தீகவாபி விகாரைக்கு சொந்தமாக அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12000 ஹேக்கர் காணி இருந்துள்ளது.அதாவது பொத்துவில் கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் கூட தீகவாபி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது.
இந்த புத்தர் சிலை தொடர்பில் நீங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை இந்த நாட்டில் அனைவரும் சகோதர்த்துடன் அவர்களது மதவிடயங்களை முன்னெடுக்கலாம்.
இந்த அபிவிருத்திக்கு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் , கிழக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமா லெப்பை ஆகியோரும் தங்களுடைய வினாக்களை தயா கமேகவிடம் தொடுத்திருந்தனர் , இவர்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு கருத்து தெரிவித்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் , நாடளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் .