இறக்காமம் – மாணிக்கமடு தமிழ்க்கிராமத்தில் பௌத்த பிக்குகளால் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுமாறு இப்பிரதேச தமிழ் – முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் தியான மண்டபம் அமைக்க காணி வேண்டுமென பௌத்த தேரர்கள் பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளனர்.
இதனால், இறக்காமம் பிரதேச மக்கள் இன்னும் பதற்றத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றனர். இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாணிக்கமடு கிராமத்திற்குச் சென்று குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
இவ்விடத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தங்குவதற்கான அறையொன்றையும் மக்கள் தங்கிச் செல்வதற்கான தியான மண்டபமொன்றையும் அமைக்க பிரதேச செயலாளரிடம் காணி வேண்டுமென பௌத்த தேரர்கள் கேட்டுள்ளனர். இதனால் இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தை சிறுபான்மையினர் பகிஷ்கரித்ததையும் பொருட்படுத்தாது இதே தினம் தியான மண்டபத்துக்கான காணியைக் கேட்டுள்ளமை சிறுபான்மையினரை ஆத்திரமடையச் செய்துள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் அடையாளப்படுத்திய பகுதிக்கு அப்பால் உள்ள காணியில் குறித்த மண்டபத்தை அமைக்க பிரதேச செயலாளரிடம் பிக்குகள் அனுமதி கேட்டபோது தங்கள் கோரிக்கையை எழுத்து மூலம் தருமாறும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.
இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த பிக்குகளின் நடவடிக்கை மேலும் அதிகரித்த வண்ணமேயுள்ளது. சிறுபான்மை சமூகங்கள் நல்லாட்சியில் வைத்துள்ள அதீத நம்பிக்கையை சில பௌத்த பிக்குகளின் சமயத்தின் பெயரிலான தீவிரப் போக்குகள் இல்லாமல் செய்யும் சூழ் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகளும் இப்பிரதேச பிரமுகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.