குருநாகல், நிக்கவெரட்டிய டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்வி, கலாச்சார பணிப்பாளருமான டாக்டர்.ஷாபி ஆகியோர் இன்று நண்பகல் {07/11/2016} அங்கு சென்று பள்ளிவாசல் முக்கியஸ்தர்களைச் சந்தித்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்தனர்.
பள்ளிவாசல் தலைவர் கே.எம்.எம்.ஹமீத் மற்றும் நிருவாக சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
அண்மையில் தெலியாகொன்னை பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் நிக்கவெரட்டிய சம்பவம் ஆகியவை இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துவதற்காக, ஒருசில நாசகார சக்திகள் வேண்டுமென்றே மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கையே என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், முஸ்லிம்கள் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடனும், அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
முஸ்லிம்கள் மீது நாசகார சக்திகள் மேற்கொள்ளும் சம்பவங்களினால் நாங்கள் உணர்ச்சிகளுக்கு அடிபணியக் கூடாதெனவும், இவ்வாறான சம்பவங்களின் போது பொலிசாரின் ஒத்துழைப்புடன், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலமே இவற்றை மேலும் பரவாமல் தடுக்க முடியுமென அவர்தெரிவித்தார்.
சீ சீ டிவி கேமரா ஒன்றை பள்ளிவாசலுக்குப் பெற்றுத் தருமாறு பள்ளி பரிபாலனசபை விடுத்த கோரிக்கையை தாங்கள் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டு வந்து, ஆவண நடவடிக்கை எடுப்பதாக டாக்டர்.ஷாபி உறுதியளித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவம் தொடர்பில் எடுத்த நடவடிக்கைகளை அவர் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறான தீயசம்பவங்கள் இனியும் இடம்பெறாதிருக்கும் வகையில் பாதுகாப்புத் தரப்பினருடனும், நாட்டுத் தலைவர்களுடனும் அமைச்சர் றிசாத் சந்திப்புக்களை மேற்கொள்வார் என டாக்டர்.ஷாபி குறிப்பிட்டார்.
ஊடகப்பிரிவு