இமெயில் விவகாரம்: ஹிலாரி மீது கடந்த ஜூலை மாதம் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை:எப்.பி.ஐ.

Hillary Clinton Begins New Hampshire Election Campaignஅமெரிக்காவில் வரும் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 36 மணிநேரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த ஜூலை மாதம் வழக்கை முடித்து விட்டது.

இந்த விவகாரம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்து வந்தது. இந்த பிரச்சினையை தொடக்கத்திலிருந்தே எழுப்பிய குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரி ரஷியாவுடன் பகிர்ந்து கொண்ட இ-மெயில்களால் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறியதுடன், ஹிலாரியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்து வந்தார்.

இதைப்போல இந்த பிரச்சினை தொடர்பாக எப்.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்படி ஒரு விசாரணை தேவையில்லை என எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கொமே சமீபத்தில் கூறி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் கடந்தவாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 

ஹிலாரியின் தனிப்பட்ட இ-மெயில்களை மீண்டும் ஆய்வு செய்ய எப்.பி.ஐ. அமைப்பு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை (வாரண்டு) பெற்றுள்ள ஜேம்ஸ் கொமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார். 

இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது. 

ஹிலாரி மந்திரியாக பதவிவகித்தபோது அவரது நெருங்கிய தோழியாக இருந்த பாகிஸ்தானியப் பெண் ஹுமா அபைதின் என்பவரது கணவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அந்தோணி வீய்னர் என்பவருக்கு சொந்தமான லேப்டாப் மூலம் அனுப்பப்பட்ட சுமார் ஆறரை லட்சம் இமெயில் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் எப்.பி.ஐ. விசாரித்து வந்தது.

இந்நிலையில், ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை. நாங்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவித்ததுபோல் ஹிலாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் ஏதும் தற்போதைய விசாரணையில் சிக்கவில்லை என எப்.பி.ஐ. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க பாராளுமன்ற தலைவர்களுக்கு எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கொமே 
அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வேறொரு தனிப்பட்ட கிரிமினல் வழக்கின் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி வெளியான எனது அறிவிப்பை ஏற்று எப்.பி.ஐ. குழுவினர் கடந்த சில நாட்களாக 24 மணிநேரமும் பணியாற்றி, ஒரு லேப்டாப்பில் இருந்த ஏராளமான இமெயில் பரிமாற்றங்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த காலத்தில் ஹிலாரி கிளிண்டனிடம் பெறப்பட்ட மற்றும் அவருக்கு அனுப்பப்பட்ட தகவல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த மறுஆய்வின் அடிப்படையில் ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்திய இமெயில் சர்வர் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ.யின் இந்த முடிவை ஜனநாயக கட்சியினர் ஆதரித்தும், குடியரசு கட்சியினர் எதிர்த்தும் பேசி வருகின்றனர். இந்த அறிவிப்பு வெளியானதும் ஓரளவுக்கு சரிய ஆரம்பித்த ஹிலாரி செல்வாக்கு இன்று 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.