தாழமுக்கம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

bay-of-bengal weather rain

இந்நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு மற்றும் கற்பாறை உடைந்து விழுதல் தொடர்பில் அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மாத்றை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் வரும் 24 மணித்தியாலங்களுக்கு கன மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமானால் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் ஏனைய ஆறுகளையும் விட அதிகரித்துள்ளது. களுகங்கையின் கீழ் பகுதியிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளையின் பின்னர் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.