அண்மைக் காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது சில சர்ச்சைக்குரிய விடயங்களை ஊடகங்களில் கூறி வருகிறார்.ஒரு குறித்த ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றின் போது அமைச்சர் றிஷாத் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்களுக்கு அமைச்சர் றிஷாதுடைய ஆதரவாளர்கள் விடுத்த வினாக்களுக்கு விடை அளிக்க இயலாமல் இப்போது ஏதாவது எழுதி இழந்த மரியாதையை தக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையே அவரது இறுதிப் பதிவு சுட்டிக்காட்டியுள்ளது.
முதலாவது வினாவிற்கான பதில்
வை.எல்.எஸ் ஹமீத் விடுக்கும் வினாக்களுக்கு அமைச்சர் றிஷாத் பதில் அளிக்க தயங்குவது ஏன் என வினா எழுப்பியுள்ளார்.வினாக்கள் பல வகைப்படும்.அமைச்சர் றிஷாத்திற்கும் வை.எல்.எஸ் ஹமீதிற்கும் இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பும் போது மாத்திரம் தான் அமைச்சர் றிஷாத் தான் அவருடைய வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.அண்மையில் இவர் குறித்த ஊடகத்திற்கு விடுத்த வினாக்கள் அமைச்சர் றிஷாத்திற்கும் இவருக்கும் தனிப்பட்ட முறையில் இடம்பெற்றதல்ல.செயலாளர் பிரச்சினை போன்ற பகிரங்க விடயங்கள்.இது தொடர்பில் யாவரும் பதில் அளிக்கலாம்.இன்னும் சொல்லப் போனால் அவர் குறிப்பிட்ட அமைச்சர் றிஷாத் ஒரு அலங்காரத் தலைவர் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அமைச்சர் றிஷாத் பதில் அளிப்பதை விட இது தொடர்பில் நன்கு அறிந்த மூன்றாம் நபர் பதில் அளிப்பதே பொருத்தமானது.
வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் பற்றி நன்கு அறிந்தவர்.அவர் விமர்சனங்களுக்கு பதில் வழங்க வை.எல்.எஸ் ஹமீத் போன்று வேலை இல்லாமல் இருக்கவில்லை.ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டுமாக இருந்தால் அவருக்கு அதற்கே நேரம் போதுமாக இருக்கும்.அமைச்சர் றிஷாத்திற்கு ஆதரவாக எழுதும் போது அவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இது உங்களுக்கு தோன்றலாம்.சில வேளை தனக்கு யாரும் ஆதரவாக கதைக்கின்றார்கள் இல்லையே என்ற ஆதங்கத்தின் மறு பக்கம் அமைச்சர் றிஷாதிக்கு ஆதரவாக யாராவது எழுதினால் அது கூலிக்காக இருக்குமோ என நினைப்பது மனித உள்ளம்.நீங்களும் மனிதன் தானே? நான் இப் பதிலில் உங்களை விட அதிகம் நாகரீகம் பேணியவனாக எழுதியுள்ளேன் என்பதை நீங்கள் இதனை வாசிக்கும் போது புரிந்து கொள்ளலாம்.
இரண்டாம் வினாவிற்கான பதில்
அமைச்சர் றிஷாத் தன்னை புகழ்ந்து கொள்ள ஆள் வைத்துள்ளதாக கூறியுள்ளீர்கள்.நான் முதல் வினாவிலேயே கூறியது போன்று உங்களை அப்படி புகழ யாருமில்லாமையின் விரக்தியின் விமர்சனமாக இதனை நோக்குகிறேன்.இப்படியான வேலையை யாரும் செய்ய மாட்டார்கள் எனவும் கூறியுள்ளீர்கள்.அமைச்சர் ஹக்கீமை அவருடைய ஆதரவாளர்கள் சாணக்கிய தலைவர்,தேசிய தலைவர் என்று அழைப்பது வழமை.அதற்காக அவர் பணம் கொடுத்து தான் இவ்வாறு செய்கிறார் என்று கூற முடியுமா? உங்கள் கூற்றுப்படி அவர் அவ்வாறு செய்யவில்லை.அமைச்சர் றிஷாத் மாத்திரமே அவ்வாறு செய்துள்ளார்.அமைச்சர் றிஷாத்திற்கும் ஹக்கீமிற்கும் இடையில் அரசியல் தலைமைத்துவப் போட்டி சென்று கொண்டிருக்கின்றது.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீமை தேசியத் தலைவர் என அவரது ஆதரவாளர் புகழ்ந்தால் அமைச்சர் றிஷாதை அவருடைய ஆதரவாளர்கள் இதே வடிவங்களில் புகழ உள ரீதியாக தூண்டப்படுவார்கள்.இவர்களை கூலிக்கு எழுதுபவர்களாக கூறுவது உங்கள் பார்வை கோளாறு.
வசை பாடுதல் பற்றிய வினாவில் நன்றி பற்றி கேட்டுள்ளீகள்.முதலில் தலைப்பிற்கு இணங்க எழுதும் பயிற்சி உங்களுக்கு தேவை என கருதுகிறேன்.
நீங்கள் குறித்த பேட்டியில் நீங்கள் தான் கட்சியின் சட்ட ரீதியான செயலாளர் எனக் கூறியுள்ளீர்கள்.தற்போது உங்களை சட்ட ரீதியான செயலாளராக ஒரு போதும் குறிப்பிட முடியாது.வை.எல்.எஸ் ஹமீத் ஆகிய நீங்கள் 21-01-2016ம் திகதி வியாழக்கிழமை அ.இ.ம.காவைச் சேர்ந்த 15 நபர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் ஒன்றை செய்திருந்தீர்கள்.இதன் போது அம் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட குறித்த செயலாளரை செயற்பட முடியாதவாறு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தற்காலிகத் தடையுத்தரவை (adjoining injunction) நீதிமன்றத்திடம் கோரி இருந்தீர்கள்.உங்களது இக் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தற்காலிக நிராகரிப்பாக இருந்தாலும் நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தற்போதைய செயலாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக செயற்பட முடியும்.அப்படியானால்,நீங்கள் உங்களை எப்படி செயலாளர் என்பது?
அமைச்சர் றிஷாத் பல விடயங்களில் ஊழல் செய்துள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.அப்படியானால் அமைச்சர் றிஷாத் ஏன் கைது செய்யப்படவில்லை.அவர் செய்ததாக நிரூபிக்கப்பட்ட ஒரு ஊழலாவது உங்களிடம் உள்ளதா? உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள் பாருங்கள்.FCID விசாரிப்பதால் அல்லது விசாரித்ததால் அமைச்சர் றிஷாத் குற்றவாளியாகி விட முடியாது.மஹிந்த ராஜ பக்ஸவை FCID பல முறை விசாரித்த போதும் நல்லாட்சியின் கதாநாயகன்களில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர் ஊழல் செய்ததற்கான எந்த ஆதாரமுமில்லை எனக் கூறியிருந்தார்.இதனை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.நீதி மன்றம் குற்றவாளி என தீர்ப்பளிகாத ஒருவரை ஒரு போதும் குற்றவாளியாக கூற முடியாது.இதனை இன்னும் தெளிவாக விளங்க இலங்கை அரசியலமைப்பின் 13(5) ஐ வாசியுங்கள்.ஆள் ஒவ்வொருவரும் குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரை அவர் சுத்தவாளியென ஊகிக்கப்பட வேண்டும்.ஆயினும்,குற்றம் சுமத்த முடியும்.நீங்கள் சட்டத்தரணி என்பதால் இதனையும் நியாபகம் செய்து கொள்கிறேன்.
பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர் றிஷாதை பார்த்து ஊழல் வாதி எனக் கூறவில்லை.நல்லாட்சி அரசில் ஊழல் செய்ததாக விசாரிக்கப்படுபவர்களில் ஒருவராகவே சுட்டிக்காட்டியிருந்தார்.நீங்கள் மீண்டும் அந்த செய்தியை வாசித்துக் கொள்ளுங்கள்.குற்றம் சாட்டப்படுபவர்கள் எல்லாம் குற்ற வாளிகள் அல்ல.அமைச்சர் றிஷாதுடைய அமைச்சு அப்படியான வீண் பழிகள் எழச் சாத்தியமானது.
எனது பதிலும் நீண்டு செல்வதால் உங்கள் தேசியப்பட்டியல் விடயத்தை நீங்கள் கூறியுள்ளது போன்று அடுத்த பதிவில் தொடர்வோம்.சற்று விடயத்தை நீட்டாமல் சுருக்கமாக முடித்தால் அனைத்திற்கும் இலகுவாக பதில் தரலாம்.
இப்றாஹிம் மன்சூர்
ஆசிரியர்
கிண்ணியா