வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை !

அஸாஹிம் 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுற்றுலா விடுதி, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நேற்று சனிக்கிழமை முழு நாளும் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை இட்ட போது 26 உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து தரிக்கும் இரண்டு உணவகங்களும் தண்ணீர் சுத்திகரிப்பு கடை ஒன்றும் தற்காலிகமாக மூடியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.லதாகரன் தெரிவித்தார்.

collage_fotor-2

குறித்த பிரதேசங்களில் தூர பிரதேசங்களுக்கான பேருந்துகள் தரிக்கும் உணவகங்கள் சுத்தம் இன்மையாக காணப்படவதாக பொதமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இத் திடீர் பரிசோதனை இடம் பெற்றதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.லதாகரன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பாசிக்குடாவிலுள்ள உல்லாச விடுதிகள், ஓட்டமாவடி நாவலடி பிரதேசம், வாழைச்சேனை போன்ற பகுதிகளில் திடீர் சோதனையிட்ட போதே 26 உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டமாவடி நாவலடி சந்தியில் பேருந்து நிறுத்தும் இரண்டு உணவகங்கள் வாழைச்சேனையில் தண்ணீர் சுத்திகரிப்பு கடை ஒன்று என்பன தற்காலிகமாக மூடியுள்ளதாக டாக்டர்.ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மேற்படி வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களினால் கடந்த மூன்று மாதங்களுக்கு எழுத்து மூலம் சுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட போதும் மேற்படி வர்த்தக நிலையங்கள் சுத்தம் இன்மை காணப்பட்டதுடன், வர்த்தக நிலையங்களில் இருந்த உணவுகள், உணவு பொதியிட பயன்படுத்தும் அச்சுப் பத்திரிகைகள் மற்றும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டது.

ஓட்டமாவடி நாவலடி சந்தியிலுள்ள உணவகங்கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கடை என்பனவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரண்டு வாரங்களுக்குள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பார்வையிட்டதன் பின்னரே வர்த்த நிலையங்களை நடாத்த முடியும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.லதாகரன் மேலும் தெரிவித்தார்.