‘தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன,விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன,பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன, மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே, பல வகைகளும் இனங்களும் உள்ளன ஆனால் மனிதரிடையே வேறுபாடே இல்லை’ என்று புத்த பெருமான் சொன்னார். ‘அவன் என்னை கடுமையாக பேசினான், என்னை அடித்தான், என்னை தோற்கடித்தான், என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான் என்பன போன்ற சிந்தனைகளுக்கு அடைக்கலம் தரும் ஒருவரிடம் வெறுப்பு தணிவதில்லை’ என்று அவர் மிக அழகாக சொல்லியிருக்கின்றார்.
எந்தவொரு இனத்தையும், மதத்தையும் பிரித்து நோக்குமாறு, அடக்கி ஆளுமாறு புத்தர் போதிக்கவில்லை. உன்னதமான வழிகாட்டியான அவரது போதனைகளை சரியாக விளங்கிச் செயற்படாத நவீனகால சிங்களவர்கள் சிலரது நடவடிக்கைகள், புத்தரையே வேதனைக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இலங்கையில் இவ்வாறான இனத்துவ நெருக்குவாரங்களின் கடைசி அத்தியாயமாக, அம்பாறை மாவட்டத்தின் மாணிக்கமடு தமிழ் பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் அமைந்துள்ளது.
பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையில் இனரீதியான, மதரீதியான அதிமேதாவித்தனம் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் பேரினவாதம், சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றது.
இந்தப்போக்கு அரச பொறிமுறையில் பிரதிபலித்ததன் விளைவுதான் 30 வருட யுத்தத்தின் அடிப்படைக் காரணமும் கூட. ஆனால், யுத்தம் முடிவடைந்த பிற்பாடு இனவாதம் வேறு ஒரு பரிணாமம் எடுத்திருப்பதாகவே தெரிகின்றது.
இலங்கையில் 2012 இற்குப் பின்னர் உருவாகியிருக்கின்ற இனவாத போக்குகள் மிகவும் கட்டக்கடங்காதவை என்பதுடன், புத்தரின் கொள்கைகளுக்கு அமைவானவையும் அல்ல. அதேபோல் இந்த இனவாதிகளுக்கு பின்னால் பொறாமை பிடித்த பௌத்த அடிப்படைவாதிகளும் வெளிநாட்டு சக்திகளும் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான ஆரம்ப சதித்திட்டமே தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு இனவாதம்சார் காரணங்களும் ஆட்சிமாற்ற காரணங்களும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்தப் பின்புலத்தை மனதில் வைத்துக் கொண்டும் மாணிக்கமடு விவகாரத்தை அலச வேண்டியிருக்கின்றது. அத்துடன், பேரினவாத்தின் வழக்கமான ஆக்கிரமிப்பு உத்தியா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
புவியியல் அமைவிடம்
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றுக் கிராமமாக இறக்காமம் திகழ்கின்றது. இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 7ஆம் கிராம சேவகர் பிரிவின் கீழ்வரும் மூன்று சிறு கிராமங்களில் ஒன்றுதான் மாணிக்கமடு ஆகும். இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதும் மாணிக்கமடு என்பது முற்றுமுழுதாக தமிழர்கள் வாழும் நிலப்பரப்பாகும். இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் சில சிங்களக் குடும்பங்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் பிரதேசத்தின் மையப் பகுதிக்கு தொலைவிலேயே உள்ளனர். அம்பாறை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் வரிப்பத்தாஞ்சேனை சந்தியில் இடதுபுறம் திரும்பி தீகவாபி செல்லும் பாதையில் 1 கிலோமீற்றர் பயணித்தாலேயே மாணிக்கமடு கிராமத்தை அடைந்து விடலாம். அங்குள்ள மாயக்கல்லி மலையிலேயே தற்போது புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி அதாவது தீபாவளி தினத்தன்று மாணிக்கமடு மாயக்கல்லி மலைக்கு வந்த பிக்குகளும் பௌத்தர்களும் பொலிஸார் பார்த்திருக்க புத்தர் சிலையொன்றை மலையுச்சியில் நிறுவிவிட்டுப் போயுள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு அருகில் அதுவும் ஒரு சிங்களவர் கூட இல்லாத மாணிக்கடுவில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பாரிய எதிர்ப்பலையையும் சர்ச்சையையும் தோற்றுவி;த்துள்ளது. அம்பாறையில் இருந்து டிப்பர் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்ட சுமார் 5 அடி உயரமான தியானநிலை புத்தர் சிலையை தேரர்கள் தலைமையிலான குழுவினரே அங்குவந்து வைத்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு வைக்கப்படுவதை அவதானித்த மாணிக்கமடு கிராமத்தைச் சேர்ந்த தமிழர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை மக்கள் சிலரும் அங்கு வந்தனர். மக்கள் என்ன செய்வதென்று தெரியாது தவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரதேச தமிழ் முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் அங்கு வந்து சேர்ந்து தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதளவுக்கு அவர்களது தொலைபேசிகள் ஓஃப் செய்யப்பட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புத்தர் சிலையை வைப்பதற்காக அங்கு சாதாரண உடையில் வந்தவர்களில் சிலர் தம்மை மாவட்டத்தின் பெரும்பான்மையின அமைச்சரின் வலதுகைகள் என்று அடையாளப்படுத்தியுள்ளனர். சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் பெற்றுக் கொண்டு அமைச்சராகிய ஒரு அரசியல்வாதி இவ்வாறான காய்நகர்;த்தல்களுக்குப் பின்னால் இருக்கின்றார் என்ற மக்களின் சந்தேகம் இச் சம்பவத்தின் மூலம் மேலும் வலுவடைந்திருக்கி;ன்றது. இந்நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் ஆட்சேபம் தெரிவித்த போது, ‘இந்த மலை தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. இது பௌத்த நாடு. எனவே நாம் எந்த இடத்திலும் பௌத்தத்தை ஸ்தாபிக்கவும் பரப்பவும் நடவடிக்கை எடுக்க உரிமையுள்ளது’ என்று அங்கு வந்த பிக்கு ஒருவர் பதிலளித்துள்ளார். ‘சட்டரீதியற்ற முறையில் இதை நாம் செய்யவில்லை’ என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களை பற்றி கணக்கெடுக்காமல், தாம் வந்த காரியத்தை நிறைவேற்றி விட்டு அக்குழுவினர் சென்றுள்ளனர்.
சிங்களவர்கள் இல்லை
வரிப்பந்தாஞ்சேனை – மாணிக்கமடு வீதிக்கு வடபுறமாக வீதியில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் மாயக்கல்லி மலை அமைந்துள்ளது. இந்த மலை உண்மையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியதாகும். இதற்கான பெயர்ப்பலகையும் கல்லும் மலையைச் சுற்றி நாட்டப்பட்டுள்ளதை அங்கு சென்ற போது காண முடிந்தது. ஆனால், மலையின் அடிவாரத்தில் இருந்து 3 மீற்றர் சுற்றுவட்டாரப் பகுதியே இவ்வாறு அடையாளமிடப்பட்டுள்ளது. தவிர அங்குள்ள முழுநிரப்பும் அரசாங்கத்திற்கோ தொல்பொருள் திணைக்களத்திற்கோ உரித்துடையதல்ல என்பது மிக முக்கியமானது. இது தொடர்பாக இப்பிரதேச முக்கியஸ்தர் ஒருவரிடம் வினவியபோது, இந்த நிலப்பரப்பின் மேற்குப் பகுதி காணி முஸ்லிம்களுக்கும் கிழக்குப் பக்கமாக உள்ள காணிகள் தமிழர்களுக்கும் சொந்தம் என்றும் ஒரு ஏக்கர் காணி கூட இங்கு சிங்களவர்களுக்கு இல்லை என்றும் உறுதியாக தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்திற்கு வந்த பௌத்தர்கள் சிலர் மலையைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்றுள்ளனர். மலையடிவாரத்தில் எதையோ நடுவதற்கு முயற்சித்தாகவும் சொல்லப்படுகின்றது. இப்பின்னணியில் ஏதோ நடக்கப் போகின்றது என்று எண்ணிய உள்ளூர் வாசிகள் தமண பொலிஸ் நிலையத்திற்; இது தொடர்பாக அறிவித்தனர். சமகாலத்தில், இங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு பிரதேச செயலாளரிடமும் சிங்களவர்கள் அனுமதி கோரியுள்ளனர். இருப்பினும், பெரும்பான்மை மக்கள் யாரும் வசிக்காத இடத்தில் புத்தர் சிலையை நிறுவுவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று பிரதேச செயலாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடிவிட்டு சொல்வதாக அவர் அக்குழுவினருக்கு கூறியுள்ளார்.
இந்தப் பின்னணியில் தமண பொலிஸார் அம்பாறை நீதிமன்றத்தில் மனுவொன்றை முன்வைத்து தடையுத்தரவு ஒன்றை பெற்றிருந்தார். சம்பவ தினம் அங்கு வந்த பொலிஸார் இந்த நீதிமன்ற தடையுத்தரவை புத்தர் சிலையை நிறுவ வந்தவர்களிடம் கையளித்த போதும், அவர்கள் அதை மதிக்காமல் தமது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டுச் சென்றுள்ளனர்.
நிலங்களை ஆக்கிரமித்தல்
புத்த பெருமான் ஒரு நல்ல வழிகாட்டி. அவருடைய மதம்சாரா போதனைகளை எந்த மதத்தவரும் விரும்பினால் பின்பற்றலாம். அவருடைய சிலை ஒன்று தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் வைக்கப்படுவதால் நமக்கு எதுவும் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால், அதன் நோக்கம் உயரியதாக இருந்திருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களின் சம்மதத்தோடு சட்டத்தை மதித்து இவ்வேலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யப்படவில்லை என்பதன் இதன் உள்நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகின்றது. புத்தர் சிலையை கொண்டு வந்து வைப்பதோடு மட்டும் இந்த வேலைத்திட்டம் முடிந்து விடும் என்று கூற இயலாது. இங்கு எதிர்காலத்தில் விகாரை ஒன்று கட்டப்படலாம், அதைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். தொல்பொருளியல் ஆராய்ச்சி என்ற பெயரில் அங்கிருக்கின்ற நிலங்கள் சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவோடு கபளீகரம் செய்யப்படலாம். ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கின்றன.
1960களில் அம்பாறை மாவட்டம் தனியொரு மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது இன்றிருக்கின்ற முழு அம்பாறை மாவட்டத்திலும் இருந்த பதிவுசெய்யப்பட்ட சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை 600 இற்கும் குறைவாகும். அதற்குப் பிறகு மீரிகம, நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து சி;ங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். இன்று இலட்சங்களை தாண்டிய சனத்தொகையாக இம் மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழ்கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை சிறுபான்மை மக்களின் நிலங்களையும் உரிமைகiயும் அபகரிப்பதிலேயே அம்பாறை தொகுதி அரசியல்வாதிகள் ஓரிருவர் குறியாக இருந்து வந்துள்ளனர். அதன் அடுத்த கட்ட நகர்வாகவே மாணிக்கமடு விவகாரத்தையும் மக்கள் நோக்குகின்றனர்.
இதை இப்படியே விட்டால் இன்னும் பல வருடங்களின் பின்னர் ‘மாணிக்கமடு’ என்பது ‘மாணிக்கமடுவ’ என்று ஆகிவிடலாம் என்று நினைத்த பிரதேசவாசிகளும் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் அதிக கரிசனை எடுத்துள்ளனர். அரச உயர் மட்டத்திற்கும் பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் அம்பாறை அரசாங்க அதிபரும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வதாக கருதமுடியும் என்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் உபதலைவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், சட்டத்தையும் ஒழுங்கையும் அரச நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போடும் அளவுக்கு சிங்கள அரசியல் மேலாதிக்கம் இருப்பதாக தெரிகின்றது.
அவசர கூட்டம்
இறக்காமம் பிரதேச செயலக தகவல்களின்படி மாணிக்கமடு பிரதேசத்தில் 101 தமிழ் குடும்பங்கள் வசிக்கி;ன்றன. சிலை சிறுவப்பட்டுள்ள மலையின் மிக ஓரத்தில், கிழக்குப் புறமாக தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. குறிப்பாக, ஓரத்திலிருக்கும் தமிழரின் வீட்டிலிருந்து மேற்கு நோக்கி அண்ணார்ந்து பார்த்தால் 150 அடி தூரத்தில் இப் புத்தர் சிலையும் அதற்கருகில் உள்ள பௌத்த கொடியும் தெரிகின்றது. ஆனால் இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் சிங்களவர்களை தவிர இங்கு நிரந்தரமாக எந்த சிங்கள குடும்பமும் இல்லை. முன்னர், இந்த மலையில் கோவில் ஒன்றை நிறுவுவதற்கு தமிழ் மக்களில் சிலர் விரும்பியிருந்த போதிலும், ஏனைய இனங்களுக்கு இடையிலான நல்லுறவை கருத்திற் கொண்டு அம்முயற்சியை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த இடத்திலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இறக்காமம், மாணிக்கமடு, வரிப்பத்தாஞ்சேனை பிரதேசங்களில் ஒருவித அச்ச சூழல் நிலவுகின்றது. பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் மலையை அண்டிய பகுதிகளில் கிரமமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான அவசர கூட்டமொன்று மாவட்ட செயலாளர் துஷித்த பி. வணிகசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை மாலை கச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர், பிக்குமார், எம்.ஐ.எம். மன்சூர் எம்.பி., மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவர் எஸ்.ஐ. மன்சூர், இறக்காமம் – வரிப்பந்தாஞ்சேனை பள்ளிவாசல் நிர்வாகிகள், மாணிக்கமடு கோவில் நிர்வாகிககள், தமண பொலிஸ் பொறுப்பதிகாரி, இறக்காமம் 7ஆம் பிரிவு கிராம சேவகர் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.
தமிழர் வாழும் பகுதியில் அடாத்தாக சிலையை கொண்டு வந்து வைத்தமையானது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இனநல்லுறவும் அமைதியும் சீர்குலையும் அபாயமிருப்பதாக பொறுப்புவாய்ந்தோர் குறிப்பிட்டனர். ஒரு முஸ்லிம் அரசியல்வாதி சிறுபான்மை மக்களின் எண்ணங்களை காத்திரமாக வெளிப்படுத்திய அதேவேளை மற்றுமொருவர், சமாளித்து உரையாற்றியதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தேரர் ஒருவர், ‘இறக்காமத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் பௌத்த இதிகாசத்துடன் தொடர்புடைய 19 இடங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஒரு இடத்திலேயே புத்தரின் சிலையை வைத்துள்ளோம்;. இங்கு குடியேற்றங்களோ வேறு மத ரீதியான நடடிவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது.
தீகவாபி செல்லும் பக்தர்கள் தரித்துச் செல்வதற்கான ஒரு மடாலயம் (சத்திரம்) மட்டுமே இங்கு நிறுவப்படும்;’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், இது பற்றி ஆராய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமது பூர்வாங்க சந்திப்புக்கள் மற்றும் ஆய்வுகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இவ்விவகாரம் சூடுபிடித்திருக்கின்றது.
இதேவேளை, ‘இந்நடவடிக்கைக்கு எதிராக வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், சமாதான சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக நாமே நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளோம்’ என்று பொலிஸ் தரப்பினர் இக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. அப்படியென்றால், பொலிஸார் சொல்வது உண்மையா அல்லது ‘நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ வெளியான செய்தி உண்மையா என்ற மனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உருவாகின்றது. இதற்கிடையில், தமிழர் வாழும் நிலப்பரப்பில் புத்தரின் சிலையை வைப்பதற்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் பச்சைக்கொடி காட்டியதாக சிங்கள தரப்பினர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. அரச நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் கசிந்ததையடுத்து மக்கள் விசனமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டத்தின் ஆட்சி
‘மாணிக்கமடு மாயக்கல்லி மலையை சூழவுள்ள நிலங்கள் அபகரிக்கப்படுவதாக’ சிங்கள கடும்போக்காளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனாலேயே தாம் இவ்வாறு செயற்படுவதாக அவர்கள் கூற விளைகின்றனர். இக் காணிகள் நீண்டகாலமாக சிறுபான்மையினருக்கு சொந்தமாக இருந்தவையாகும். இதேவேளை இந்த மலை தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்கு உரியது என்றால் அவ்வளாகத்திற்குள் பிரவேசிப்பதே சட்டத்திற்கு முரணானதாகும். எனவே, அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டிருப்பின் முதலாவதாக தொல்பொருள் ஆராச்சித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சமகாலத்தில், நீதிமன்ற தடையுத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு நீதியின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்.
அண்மையில் கிளிநொச்சியிலும் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது. அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில், ‘பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்க பௌத்த மதம் அனுமதிக்கவில்லை’ என்று அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘முஸ்லிம்கள் விரும்பிய இடத்தில் எல்லாம் பள்ளிவாசல் நிர்மாணித்துக் கொள்ளும் போது நாம் ஏன் புத்தர் சிலையை வைக்க முடியாது?’ என்று இலங்கையில் இனவாத செயற்பாடுகளுக்கு பெயர்போன ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் ஆட்சிமாற்றத்திற்கு சிறுபான்மை மக்களே காரணம் எனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம் இன ரீதியான அத்துமீறல்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போதும் நாட்டில் ஏதோவொரு வடிவில் இனவாத நெருக்குவாரங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதற்கெதிராக நல்லாட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பெருங் குறையாக இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்ற பசுத்தோலுக்குள் ஒளிந்து கொண்டு சில சக்திகள் புலிவேட்டையாடுவதற்கு முற்படுகின்றன. இன நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற அரசாங்கம் இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் விவகாரங்களை ‘சிறிய விடயம்’ என்று ஆட்சியாளர்கள் தட்டிக்கழிக்க முடியாது. பண்டாரநாயக்க வளர்த்த இனவாதமே பின்னர் கையில் துப்பாக்கி ஏந்திவந்து அவரை படுகொலை செய்தது. தம்புள்ளை பள்ளிவாசல், அளுத்கம விவகாரங்களே மஹிந்தவின் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது என்பதை அரசாங்கம் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளட்டும்.
• ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி 06.11.2016)